/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'சென்னை பஸ்' செயலி ஐபோனிலும் அறிமுகம்
/
'சென்னை பஸ்' செயலி ஐபோனிலும் அறிமுகம்
ADDED : பிப் 22, 2024 10:48 PM

சென்னை, சென்னை பஸ் செயலியை ஐபோனிலும் பயன்படுத்தும் வசதியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், தினமும் 650க்கும் மேற்பட்ட வழித்தடங்களில், 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் சராசரியாக 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
மாநகர பேருந்துகளின் வருகை நேரம், வந்து கொண்டு இருக்கும் இடம் உள்ளிட்ட விபரங்களை பயணியர் தெரிந்து கொள்ளும் வகையில், 'சென்னை பஸ்' என்ற செயலி, கடந்த ஆண்டு மே மாதத்தில் துவங்கப்பட்டது. இந்த செயலியை தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த செயலியை, ஐபோனிலும் பெறும் வகையில் கொண்டுவர பயணியர் கோரிக்கை விடுத்தனர். இதன்படி ஐபோனிலும் இந்த செயலியை பயன்படுத்தும் வகையிலான, 'ஐஓஎஸ் வெர்சன்' தயாரானது. இதை, தலைமை செயலகத்தில் நேற்று அமைச்சர் சிவசங்கர் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை நிர்வாக இயக்குனர் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் வாயிலாக, பேருந்து நிறுத்தங்களின் விபரம், நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்துகளின் விபரங்களை நேரப்படி அறிந்து கொள்ளலாம்.
மேலும், அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே ஒரு பொத்தான், அழுத்தி தெரிவித்துக் கொள்ளும் வகையில் இந்த செயலி அமைக்கப்பட்டுள்ளது.