/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தொழில் உரிமம் பெறாத கடைகள் கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு தயாராகுது சென்னை மாநகராட்சி
/
தொழில் உரிமம் பெறாத கடைகள் கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு தயாராகுது சென்னை மாநகராட்சி
தொழில் உரிமம் பெறாத கடைகள் கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு தயாராகுது சென்னை மாநகராட்சி
தொழில் உரிமம் பெறாத கடைகள் கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு தயாராகுது சென்னை மாநகராட்சி
ADDED : பிப் 03, 2025 11:54 PM
சென்னையில், தொழில் உரிமம் புதுப்பிப்பு மூன்று ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டு, கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரும் மார்ச் 31க்குள் உரிமம் புதுப்பிக்க மாநகராட்சி, 'கெடு' விதித்துள்ளது.
உரிமம் பெறாத, புதுப்பிக்காத கடைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில், கணக்கெடுப்பும் துவக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், சிறு, குறு முதல் பெரிய வியாபார கடைகள் வரை இயங்கி வருகின்றன. இதில், 67,000 கடைகள் மாநகராட்சியிடம் தொழில் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன.
தொழில் உரிமம் புதுப்பிக்க, கடைகளின் தன்மைக்கேற்ப, 500 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி, ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
ஆனால், இந்த அவகாசத்தை அதிகப்படுத்த வேண்டும் என, வியாபாரிகளில் ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இதையேற்று, தொழில் உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஓராண்டில் இருந்து, மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. அதற்கேற்ப கட்டணமும் 50 முதல் 100 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
கட்டணம் எவ்வளவு?
l வளர்ப்பு பிராணிகள், பறவைகள் கடைகளுக்கு, 20 ரூபாயாக இருந்த தொழில் உரிம கட்டணம், 1,500 முதல் 10,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது
l சிறு, குறு கடைகளுக்கு, 3,500 ரூபாய் முதல் 7,000 ரூபாய்; சிறிய கடைகளுக்கு, 7,000 முதல் 10,000 ரூபாய்; நடுத்தர கடைகளுக்கு 10,000 முதல் 20,000 ரூபாய்; பெரிய கடைகளுக்கு 15,000 முதல் 50,000 ரூபாய் என, 500க்கும் மேற்பட்ட வியாபார கடைகள் பட்டியலிடப்பட்டு, கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
l மேலும், அமர்ந்து சாப்பிடக்கூடிய டீ கடை முதல் ஹோட்டல் வரை, சதுர அடி பரப்பளவு அடிப்படையில், 5,000 முதல் 15,000 ரூபாய்; கேண்டீன், பாஸ்புட், ரெஸ்டாரன்ட் ஆகியவற்றுக்கு, 5,000 முதல் 20,000 ரூபாய் வரை; ஸ்பா போன்றவற்றிற்கு, 25,000 ரூபாய் வரை தொழில் உரிமம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, மூன்றாண்டு கால தொழில் உரிமம் வழங்கும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது.
கணக்கெடுப்பு
மாநகராட்சியில் தொழில் உரிமம் புதுப்பிக்காத மற்றும் பெறாத வியாபார கடைகள் கண்டறியப்பட்டால், 'சீல்' வைக்கப்படுவதுடன், சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என, மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தொழில் உரிமம் புதுப்பிக்கும் காலம், ஓராண்டில் இருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது, வியாபாரிகளுக்கு பலனளிக்க கூடிய ஒன்று.
அதற்கேற்ப கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், தொழில் உரிமம் பெறாத, புதுப்பிக்காத கடைகள் கண்டறியப்பட்டால், அவற்றிற்கு, 'சீல்' வைப்பதுடன், உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு துவங்கியுள்ளது. எனவே வியாபாரிகள், மார்ச் 31க்குள் தங்கள் தொழில் உரிமத்தை புதுப்பிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -