/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருமழிசையில் நில தொகுப்பு திட்டம் 790 ஏக்கர் தேர்வு செய்தது சி.எம்.டி.ஏ.,
/
திருமழிசையில் நில தொகுப்பு திட்டம் 790 ஏக்கர் தேர்வு செய்தது சி.எம்.டி.ஏ.,
திருமழிசையில் நில தொகுப்பு திட்டம் 790 ஏக்கர் தேர்வு செய்தது சி.எம்.டி.ஏ.,
திருமழிசையில் நில தொகுப்பு திட்டம் 790 ஏக்கர் தேர்வு செய்தது சி.எம்.டி.ஏ.,
ADDED : டிச 10, 2024 12:13 AM

சென்னை,
சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில், நில தொகுப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, 790.35 ஏக்கர் நிலங்களின் விபரங்களை, சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில், புது நகர் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்துள்ளது. தமிழக அரசு இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, 2022ல் அரசாணை பிறப்பித்தது.
திருமழிசையில், 17 கிராமங்களை உள்ளடக்கிய, 34.10 சதுர கி.மீ., பரப்பளவில், புது நகர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தனியார் கலந்தாலோசகர் வாயிலாக, இதற்கான விரிவான வரைவு அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இங்கு புது நகர் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெறுவதற்கான முயற்சியில், சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் போட்டியின் முடிவை பொறுத்து, நிதி கிடைக்குமா என்பது தெரியவரும்.
இந்நிலையில், திருமழிசையில் மக்களிடம் நிலத்தை கையகப்படுத்தாமல், புது நகருக்கான புறவழிச்சாலை போன்ற பொது வசதிகளை ஏற்படுத்த, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கு முதற்கட்டமாக, 790.35 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன்படி, கோளப்பஞ்சேரி, காவலச்சேரி, உடையவர் கோவில், திருமழிசை, குத்தம்பாக்கம், பழஞ்சூர், வரதராஜபுரம், துாக்கணாம்பட்டு ஆகிய கிராமங்களில் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் நில தொகுப்பு திட்டத்துக்காக தேர்வான நிலங்களின் சர்வே எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலங்கள் உரிமையாளர்களின் ஒப்புதல் பெற்று மேம்படுத்தப்படும்.
மதிப்பு கூட்டப்பட்ட மனைகளாக உரிமையாளர்களுக்கு நிலங்கள் வழங்கப்படும்.
ஒவ்வொரு உரிமையாளரிடம் இருந்தும் பெறப்படும் நிலத்தில், 60 சதவீத அளவுக்கான மனை திரும்ப வழங்கப்படும்.
இந்த நிலங்கள் குறித்த விபரங்களை, சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் உள்ள ஆலோசனை மையத்தை, பொதுமக்கள் நேரில் அணுகலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

