/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி சிக்னலில் 'பூத்' அமைத்து 'வசூல்' வேட்டை
/
கூடுவாஞ்சேரி சிக்னலில் 'பூத்' அமைத்து 'வசூல்' வேட்டை
கூடுவாஞ்சேரி சிக்னலில் 'பூத்' அமைத்து 'வசூல்' வேட்டை
கூடுவாஞ்சேரி சிக்னலில் 'பூத்' அமைத்து 'வசூல்' வேட்டை
ADDED : ஜன 01, 2025 12:12 AM

கூடுவாஞ்சேரி,நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் சிக்னல் உள்ளது.
தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனங்கள், இந்த சீனிவாசபுரம் சிக்னலில் வலதுபுறமாக திரும்பி, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மற்றும் ஊரப்பாக்கம் நோக்கிச் செல்கின்றன.
செங்கல்பட்டில் இருந்து, தாம்பரம் நோக்கி வரும் வாகனங்கள், இந்த சிக்னலில் நின்று செல்கின்றன. சீனிவாசபுரம் சிக்னல் அருகில் வலதுபுறம் மீனாட்சி நகர், செல்லப்பா நகர், ராதாகிருஷ்ணன் தெரு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன.
மீனாட்சி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுவட்டார பகுதிவாசிகள், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், ஜி.எஸ்.டி., சாலையிலுள்ள அணுகு சாலையை பயன்படுத்தி சென்று வந்தனர்.
தற்போது சில நாட்களாக, சிக்னல் அருகில் அணுகு சாலையில் போலீஸ் 'பூத்' அமைத்து, அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அணுகு சாலையை பயன்படுத்த முடியாதபடி, போலீசார் தடுக்கின்றனர்.
அத்துடன், அணுகுசாலையில் வருவோரை மடக்கி, வலுக்கட்டாயமாக அபராதம் வசூலித்து வருவதாக, வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, மீனாட்சி நகர் பகுதியில் வசிக்கும் ராமகிருஷ்ணன், 58, என்பவர் கூறியதாவது:
நான் சீனிவாசபுரம் அருகிலுள்ள மீனாட்சி நகரில் வசிக்கிறேன். சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறேன். வீட்டில் இருந்து கிளம்பும் போது அணுகுசாலையை பயன்படுத்திச் செல்கிறேன். அதேபோன்று திரும்பவும் வீட்டிற்கு வரும்போது, அதே அணுகு சாலையை பயன்படுத்தி வருகிறேன்.
கடந்த சில நாட்களாக, இந்த அணுகுசாலையை பயன்படுத்த முடியாதபடி, சிக்னல் அருகில் பூத் அமைத்து, போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.
அபராதம் வசூலிக்கும் போலீசார், அதற்கு ரசீதும் வழங்குவது கிடையாது. மேலும் இந்த அணுகு சாலையில் திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.
அங்கு பணிபுரியும் பணியாளர்களின் வாகனங்களையும் தடுத்து நிறுத்தி அபராதம் வசூலிக்கின்றனர். அதற்கும் உரிய ரசீது தருவதில்லை.
ஆனால், இந்த அணுகுசாலை ஓரத்தில், தனியார் கம்பெனிக்குச் சொந்தமான கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
பொதுமக்களின் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படவில்லை.
எனவே, இப்பகுதிவாசிகளிடம் கறார் வசூல் வேட்டை நடத்தும் போக்குவரத்து போலீசார் மீது, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சிக்னலில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
அதில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து, போக்குவரத்து போலீசார் நடத்திவரும் வசூல் வேட்டையை தடுக்க வேண்டும். பொதுமக்கள் அணுகு சாலையை பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

