/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனி வீடு எடுத்து தங்கும் கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக குற்றச்சாட்டு
/
தனி வீடு எடுத்து தங்கும் கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக குற்றச்சாட்டு
தனி வீடு எடுத்து தங்கும் கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக குற்றச்சாட்டு
தனி வீடு எடுத்து தங்கும் கல்லுாரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக குற்றச்சாட்டு
ADDED : நவ 18, 2025 04:05 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் பயிலும் பல்வேறு வெளிமாநில, மாவட்ட மாணவர்கள், தனியாக வீடு எடுத்து தங்குகின்றனர். இவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி, குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு, திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தனியார் பொறியியல் கல்லுாரி மற்றும் கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன.
செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய பகுதிகளில், தனியார் பொறியியல் கல்லுாரிகள், கலை அறிவியல் கல்லுாரிகள் அதிகமாக உள்ளன.
சென்னைக்கு அருகே, புகழ்பெற்ற தனியார் பல்கலைக் கழகங்கள் உள்ளன.
இந்த தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தர்கள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.
இவர்களில் சிலர், கல்லுாரிகளில் உள்ள விடுதியில் தங்கி உள்ளனர். பலர், தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
இந்த தனியார் கல்லுாரிகளில் மாணவ - மாணவியர் தங்கி படிப்பதற்கு, அனைத்து வசதிகளுடன் கூடிய விடுதிகள் உள்ளன.
இங்கு தங்கும் மாணவ - மாணவியர் போதைப் பொருட்கள், மதுபானம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாது.
இதனால், ஒரு சில மாணவ - மாணவியர் பெற்றோரை ஏமாற்றி இரண்டு, மூன்று பேராக நண்பர்களுடன் சேர்ந்து, தனி வீடு எடுத்து குறைந்த செலவில் தங்குவதாக கூறுகின்றனர்.
அதன் பின் இவர்கள் மதுப்பழக்கம், கஞ்சா புகைத்தல் போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.
மேலும், வாடகை வீடுகளில் தங்கி படிக்கும் மாணவர்களை வீட்டின் உரிமையாளர்கள், வீடுகளை சுத்தம் செய்தல், கடைக்கு அனுப்புதல், அவர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை அளிக்கின்றனர்.
இதனால் கவனம் சிதறி, அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
அத்துடன், இக்கல்லுாரிகளில் படிக்கும் பெண்கள் சிலர், தனக்கு பிடித்த நபர்களுடன், காதல் என்ற போர்வையில் தனியாக வீடு எடுத்து தங்குவதும் அதிகரித்து வருகிறது.
சென்னை அருகே உள்ள தனியார் பல்கலையில் கஞ்சா, அபின், கோகைன் உள்ளிட்ட போதை பொருட்களை, கடந்த சில மாதங்களுக்கு முன், போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பல்கலை கல்லுாரி மாணவர்கள் சிலரை கைது செய்தனர்.
இதேபோன்று, திருப்போரூர் பகுதியிலுள்ள தனியார் கல்லுாரியில் போதைப் பொருட்கள் வைத்திருந்த மாணவர்களை திருப்போரூர், கேளம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.
இதுமட்டுமின்றி, தனியார் கல்லுாரி வளாகங்களில் மாணவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் பல நடந்துள்ளன.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, தனியார் பல்கலை மற்றும் பொறியியல் கல்லுாரி, கலை அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியரை, கல்லுாரி விடுதிகளில் தங்கி படிக்க வைக்க பெற்றோருக்கு கல்லுாரி நிர்வாகங்கள் மற்றும் அரசு அறிவுறுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

