/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு கிடங்கு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார்
/
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு கிடங்கு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார்
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு கிடங்கு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார்
சிலாவட்டத்தில் நவீன நெல் சேமிப்பு கிடங்கு தரமற்ற முறையில் அமைக்கப்படுவதாக புகார்
ADDED : டிச 07, 2024 12:41 AM

மதுராந்தகம்,
செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் பிரதான தொழில்.
இப்பகுதியில் கிணற்று பாசனம் மற்றும் ஏரி பாசனம் வாயிலாக விவசாயிகள் நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்களை பயிரிட்டு வருகின்றனர்.
இதில், பருவ மழைக் காலங்களில் நெல் விவசாயம் செய்வதில், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக, மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட அச்சிறுபாக்கம், ராமாபுரம், வேடந்தாங்கல், ஒரத்தி, எல்.எண்டத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 30,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், நெல் விவசாயம் செய்கின்றனர்.
மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாயிலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
இவ்வாறு, விவசாயிகளிடமிருந்து, 30,000 மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
சிலாவட்டம் மற்றும் அண்டவாக்கம் பகுதிகளிலுள்ள திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கில், தரைப்பகுதியில் கற்கள் மற்றும் சவுக்கு கட்டை வைத்து, இந்த நெல் மூட்டைகள் அடுக்கப்படும்.
பின், நெல் மூட்டைகளை பாலித்தீன் தார்ப்பாய்களால் மூடி பாதுகாத்து, லாரிகள் வாயிலாக தென் மாவட்டங்களில் உள்ள அரைவை ஆலைகளுக்கு, செங்கல்பட்டில் இருந்து ரயில்களில் அனுப்பி வந்தனர்.
தற்காலிகமாக நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து பாதுகாப்பதற்கு பதிலாக, நிரந்தரமாக நெல்லை சேமிக்க கிடங்கு அமைக்க வேண்டுமென, இப்பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக, மதுராந்தகம் அடுத்த சிலாவட்டத்தில், 15,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, கூரை அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளம் அமைக்க, நபார்டு வங்கி நிதி உதவி 14.42 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, தலா 3,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட, 5 கூரைகள் கொண்ட அமைப்புடன் கூடிய நவீன சேமிப்பு தளம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த கட்டுமானப் பணிகள், தரமற்ற முறையில் நடந்து வருவதாக, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயிகள் புகார் அளித்துள்ளனர்.
தரமற்ற பணி
சிலாவட்டம் பகுதியில் அமைக்கப்படும் நவீன நெல் சேமிப்பு கிடங்கு கட்டுமான பணி, தரமற்ற முறையில் நடைபெறுகிறது. தரைப்பகுதி மற்றும் சுற்றுச்சுவர் பகுதியில், தரமற்ற சிமென்ட் கலவை பயன்படுத்தப்பட்டு உள்ளது. கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த கட்டுமான பணியை தரமான முறையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மு.வெங்கடேசன்,
செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள்
நலச்சங்க தலைவர், பெருக்கரணை கிராமம்.