/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் -- வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
/
வண்டலுார் -- வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
வண்டலுார் -- வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
வண்டலுார் -- வாலாஜாபாத் மேம்பாலத்தில் வழிகாட்டி பலகை இல்லாமல் குழப்பம்
ADDED : ஜூன் 07, 2025 01:42 AM

வண்டலுார்:வண்டலுாரிலிருந்து வாலாஜாபாத் செல்ல, ஜி.எஸ்.டி., சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில், ஒரு பகுதியில் வழிகாட்டி பலகை இல்லை. இதனால், செங்கல்பட்டு வழியாக ஜி.எஸ்.டி., சாலை வந்து, வாலாஜாபாத் செல்வோர், வழி தவறி பெருங்களத்துார் வந்து திரும்பிச் செல்லும் நிலை நிலை தொடர்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் ரயில் நிலையம் அருகிலிருந்து, வாலாஜாபாத் சாலை துவங்குகிறது.
இந்த சாலை வழியாக காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லலாம்.
வண்டலுார் வழியாக புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் அடிக்கடி செல்வதால், ரயில் தண்டவாளத்தை கடந்து, வாலாஜாபாத் சாலைக்கு செல்ல, வாகனங்கள் வெகு நேரம் காத்து நின்றன.
இதனால், ஜி.எஸ்.டி., சாலையில், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அடிக்கடி நடந்தன.
இதற்கு தீர்வாக, ஜி.எஸ்.டி., சாலையுடன், வாலாஜாபாத் சாலையை இணைக்கும்படி, 27 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, 2012ல் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வந்தது.
தாம்பரத்திலிருந்து வண்டலுார் நோக்கி வரும் வாகன ஓட்டிகள் அறியும்படி, இந்த மேம்பாலத்தின் முகப்பு பகுதியில், வழிகாட்டி பலகை வைக்கப்பட்டது.
ஆனால், செங்கல்பட்டு மற்றும் கேளம்பாக்கம் ஆகிய பகுதியிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் அறியும்படி, வழிகாட்டி பலகை அமைக்கப்படவில்லை.
இதனால் வாலாஜாபாத், காஞ்சிபுரம் செல்ல புதிதாக வரும் வாகன ஓட்டிகள், பெருங்களத்துார் வரை வந்து, அதன் பின் தவறை உணர்ந்து, 'யு டர்ன்' எடுத்து, மீண்டும் வண்டலுார் நோக்கி வந்து, மேம்பாலத்தில் பயணித்து, வாலாஜாபாத் செல்ல வேண்டி உள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
செங்கல்பட்டிலிருந்து ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் போது, கிளாம்பாக்கம் மற்றும் வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே, மூன்று மேம்பாலங்கள் வாகன ஓட்டிகளை குழப்புகின்றன.
அதையடுத்து, வண்டலுார் ரயில் நிலையம் அருகே உள்ள பாலம் எங்கு செல்கிறது என்பதை கண்டறிய, வழிகாட்டி பலகை இல்லை.
இதனால் வாலாஜாபாத், காஞ்சிபுரம் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள், நேராக பெருங்களத்துார் வந்து விடுகின்றனர்.
பின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலத்தில் ஏறி, இடது பக்கம் திரும்பி, பெருங்களத்துார் ஊர் பகுதிக்குள் செல்கின்றனர்.
அதன் பின் சுதாரித்து திரும்பி, மீண்டும் வண்டலுார் வருவதற்குள், நேரம் விரயமாகி, மன உளைச்சலும் அடைகின்றனர்.
எனவே, வண்டலுார் ரயில் நிலையம் அருகே, வாலாஜாபாத் செல்லும் வழிகாட்டி பலகையை, வாகன ஓட்டிகளின் கண்களுக்கு தெளிவாக தெரியும்படி, பெரிய அளவில் வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.