/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில் நெரிசல்... அதிகரிப்பு! 2 கி.மீ., காத்திருந்து கடக்கும் வாகனங்கள்
/
ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில் நெரிசல்... அதிகரிப்பு! 2 கி.மீ., காத்திருந்து கடக்கும் வாகனங்கள்
ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில் நெரிசல்... அதிகரிப்பு! 2 கி.மீ., காத்திருந்து கடக்கும் வாகனங்கள்
ஆத்துார், பரனுார் சுங்கச்சாவடிகளில் நெரிசல்... அதிகரிப்பு! 2 கி.மீ., காத்திருந்து கடக்கும் வாகனங்கள்
ADDED : ஜூலை 09, 2024 06:17 AM

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இல்லாததால், தினமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தபடி உள்ளது. அதனால், சுங்கச்சாவடியை கடக்கும் வாகனங்கள், 2 கி.மீ., காத்திருந்து கடக்க வேண்டிய நிலை உள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் நந்திவரம் -- கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய நகராட்சிகள் உள்ளன.
மறைமலை நகர், மகேந்திரா வேர்ல்டு சிட்டி, ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில், தொழிற்சாலைகள் நிறைய உள்ளன.
இத்தொழிற்சாலைகளில், தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் பணிபுரியும் பகுதியில், வாடகை வீடு எடுத்து வசிக்கின்றனர்.
இதுமட்டும் இன்றி, சென்னையின் நுழைவாயிலாக செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள் இருப்பதால், குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன. வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், பரனுார் முதல் பெருங்களத்துார் வரை, எட்டு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டதால், வாகனங்கள் எளிதில் சென்று வருகின்றன.
சென்னை மற்றும் புறநகரில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தோர், பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், சொந்த ஊர் செல்வது வழக்கம்.
விடுமுறை முடிந்து, சென்னைக்கு திரும்புகின்றனர். இவர்கள் வரும் வாகனங்களால், செங்கல்பட்டு, பரனுார் சுங்கச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஒரே நேரத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்துகளுடன், அதிக அளவிலான தனிநபர் வாகனங்களும் சுங்கச்சாவடியை கடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதனால், சுங்கச்சாவடியில் இருந்து, இரண்டு கி.மீ., தொலைவுக்கு காத்திருந்து, கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் சுங்கச்சாடியிலும், இதேபோல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசல், செங்கல்பட்டு முதல் சென்னை பல்லாவரம் வரை நீண்டிருக்கிறது.
இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, விமான நிலையம், பள்ளி, கல்லுாரி, அத்தியாவசிய பணி உள்ளிட்ட பல்வேறு தேவைக்கு செல்வோர், கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பரனுார் சுங்கச்சாவடியில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஸ்கேன் செய்யும் மென்பொருட்கள் மற்றும் கருவிகள், வேகமாக செயல்படவில்லை.
இதனால், வாகன நெரிசல் அதிகரிக்கிறது. இந்த கருவிகளை மாற்றி, அதிநவீன கருவிகள் பொருத்தினால் மட்டுமே, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருப்பதை தவிர்த்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும்.
இதற்கிடையில், செங்கல்பட்டு மாவட்ட சட்டம் - ஒழுங்கு ஆய்வு கூட்டத்தில், சுங்கச்சாவடியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பற்றி விவாதிக்கப்பட்டது.
உளுந்துார்பேட்டையில் உள்ளதைப் போல, அதிநவீன ஸ்கேனர் கருவிகள் மற்றும் நவீன உபரகணங்களை, பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளிலும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல, அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த சாப்ட்வேர் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள்,
சென்னை.
சுங்கச்சாவடிகளில், உள்ளூர் வாகனங்கள் செல்வதற்கு தனி வழியும், அரசு பேருந்துகள் செல்வதற்கு தனி வழியும் ஏற்படுத்த வேண்டும். வாகனங்களை ஸ்கேன் செய்யும்போது, 40 நொடிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. விழுப்புரம் பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், வாகனங்கள் கடக்கும்போதே ஸ்கேன் செய்யப்படுகிறது. இதேபோல், பரனுார், ஆத்துார் சுங்கச்சாவடிகளிலும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.
- ஆர்.தணிகாசலம்,
சமூக ஆர்வலர், செங்கல்பட்டு.