/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
39 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம்...புதுசு!:8 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
/
39 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம்...புதுசு!:8 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
39 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம்...புதுசு!:8 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
39 அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம்...புதுசு!:8 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டம்
ADDED : நவ 25, 2024 01:59 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 39 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது. எட்டு மாதங்களில் பணிகளை முடித்து, கட்டடங்களை ஒப்படைக்க வேண்டும் என, ஒப்பந்ததார்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிதோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
இவற்றில், 962 அங்கன்வாடி மையங்கள் அரசு கட்டடத்திலும், 197 மையங்கள் வேறு அரசு கட்டடங்களிலும், 107 மையங்கள் வாடகை மற்றும் வாடகை இல்லாத கட்டங்களிலும் என, மொத்தம் 1,266 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
இதில், பழுதடைந்த கட்டடங்கள், அரசுத்துறை இடங்கள் மற்றும் தனியார் கட்டடங்களில் வாடகையில் இயங்கும் கட்டடங்களுக்கு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, பழுதடைந்த கட்டடங்களுக்கும், வாடகை கட்டடத்தில் இயங்கிய மையங்களுக்கும், புதிய கட்டடங்கள் கட்டித்தர, கலெக்டரிடம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கருத்துரு அனுப்பி வைத்தனர்.
அதன்பின், அங்கன்வாடி மையங்கள் புதிதாக கட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம், சமூக பொறுப்பு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து, ஊரக வளர்ச்சித் துறைக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பின், 2020 - 21ம் ஆண்டில், 35 கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. 2023 - 24ம் ஆண்டில், 20 கட்டடங்கள் கட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், ஒரு அங்கன்வாடி மையத்திற்கு 16.50 லட்சம் ரூபாய் என, மொத்தம் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதியை, ஊரக வளர்ச்சிதுறை ஒதுக்கீடு செய்தது.
இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இதில், 15க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. மற்ற அங்கன்வாடி மையங்களில், பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதைத்தொடர்ந்து, 2024 -25ம் நிதியாண்டில், கல்வி நிதியின் கீழ், நான்கு அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்ட, தலா 16.50 லட்சம் ரூபாய் நிதியை வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.
பின், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில், 25 அங்கன்வாடி மையங்கள் கட்ட, தலா 16.50 லட்சம் ரூபாய் நிதியை, ஊரக வளர்ச்சித் துறையினர் ஒதுக்கீடு செய்துள்ளனர். இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதியை, கலெக்டர் வழங்கினார்.
கல்பாக்கம் அணுமின் நிலையம் சார்பில், திருக்கழுக்குன்றம், லத்துார் ஊராட்சி ஒன்றியங்களில், அணுமின் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில், அங்கன்வாடி மையங்கள் சமூக பொறுப்பு நிதியின் கீழ், 2020 - 21ம் ஆண்டு இரண்டு கட்டடம், 2022 - 23ம் ஆண்டு பத்து கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின், 2024 - 25ம் ஆண்டு, அணுமின் நிலையம் சமூக பொறுப்பு நிதியின் கீழ், 10 அங்கன்வாடி மையங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்ட, கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இப்பணிகளும், விரைவில் துவக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 39 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இப்பணிகளை எட்டு மாதங்களுக்குள் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதுள்ளது. கடந்த ஆண்டு துவங்கிய ஐந்து அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க, ஒப்பந்ததார்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
- ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரிகள்,
செங்கல்பட்டு.