/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடம்பாடி மாரி சின்னம்மன் கற்கோவில் கட்டுமான பணி தீவிரம்
/
கடம்பாடி மாரி சின்னம்மன் கற்கோவில் கட்டுமான பணி தீவிரம்
கடம்பாடி மாரி சின்னம்மன் கற்கோவில் கட்டுமான பணி தீவிரம்
கடம்பாடி மாரி சின்னம்மன் கற்கோவில் கட்டுமான பணி தீவிரம்
ADDED : பிப் 10, 2025 11:52 PM

மாமல்லபுரம்,
மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், மாரி சின்னம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. கோவிலில் வீற்றுள்ள அம்மன், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட பகுதியினரின் குலதெய்வம் மற்றும் விருப்ப தெய்வமாக விளங்குகிறார்.
சில நுாற்றாண்டுகளுக்கு முன், வேப்பமரத்தின் கீழ் சுயம்புவாக உருவான அம்மனுக்கு, அப்பகுதி பக்தர்கள் சிறிய கோவில் அமைத்து வழிபட்டனர்.
பக்தர்கள் அதிகரித்து வழிபாடு சிறப்புற்ற நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை, கடந்த 2008ல், அதன் நிர்வாக பொறுப்பில் ஏற்றது. அத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் இயங்கும் ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வகிக்கிறது.
இந்நிர்வாகம், பழைய கோவிலை இடித்து, உபயதாரர்கள் வாயிலாக புதிதாக கட்ட முடிவெடுத்தது. முதல்கட்டமாக, கோவில் முன்புறம், கலையம்ச மஹாமண்டபம் கட்டியது.
பின்னர், அம்மன் சன்னிதி, அர்த்த மண்டபம் ஆகியவற்றை இடித்து, 1.40 கோடி ரூபாய் மதிப்பில், கருங்கற்களில் கட்ட முடிவெடுத்தபோது, பழமையான கோவில் என்பதால், அதை இடிக்காமல் புனரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள, உயர்நீதிமன்ற வல்லுனர் குழு அறிவுறுத்தியது.
நீதிமன்ற வல்லுனர் குழு அனுமதி பெறும் நடைமுறைக்கு முன்பே உருவான மஹாமண்டபம், கோவிலை விட உயரமாக கட்டப்பட்டது. மஹாமண்டபத்தைவிட, கோவில் தாழ்வாக அமைந்த நிலையில், அர்த்தமண்டபம் மற்றும் கோவிலை உயரமாக கட்ட வேண்டிய சூழலை, குழுவினரிடம் விளக்கி, புதிதாக கட்ட அனுமதி பெறப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சென்னை சேலையூரைச் சேர்ந்த உபயதாரர்கள் பொன்னுவேலு, சுந்தரம், மணவாளன் ஆகியோர் வாயிலாக, அர்த்தமண்டபம், மூலவர் சன்னிதி ஆகியவற்றை,கருங்கற்களில் அமைக்க, கோவில் நிர்வாகம் அனுமதித்தது. 2023 ஜூலையில், கோவிலை இடித்து, கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. அர்த்தமண்டபம், கருவறை கட்டும் பணிகள், தீவிரமாக நடக்கின்றன.
இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:
அர்த்தமண்டபத்தை 13.5 அடி உயரத்திலும், மூன்று நிலை மூலவர் சன்னிதி விமானமும் அமைக்கிறோம். அதற்காக, நிலமட்டத்தின்கீழ், எட்டு அடி ஆழ அடித்தளம் அமைக்கப்பட்டு, அதன்மேல் ஐந்தடி உயர கட்டுமானம், அதற்கும் மேல், 8.5 அடி உயர கோவில் அமைக்கப்படுகிறது. தற்போது 10 அடி வரை உயர்ந்துள்ளது. அடுத்தடுத்த பணிகள் தீவிரமாக நடக்கிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

