/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகளில்... இழுபறி: நடப்பாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்
/
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகளில்... இழுபறி: நடப்பாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகளில்... இழுபறி: நடப்பாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்
கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமான பணிகளில்... இழுபறி: நடப்பாண்டுக்குள் செயல்பாட்டுக்கு வருவது சந்தேகம்
ADDED : மே 20, 2025 09:16 PM

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமான பணியில், ஒரு பக்க நடைமேடை பணிகள் கூட இன்னும் முடியவில்லை. ரயில் நிலையத்திலிருந்து பேருந்து முனையம் வரை அமைக்கப்படும் உயர்மட்ட நடைபாதை கட்டுமான பணிகளும் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இதனால், நடப்பாண்டிற்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வருமா என்பது சந்தேகமாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
சென்னை, கோயம்பேடில் இயங்கிய புறநகர் பேருந்து நிலையத்தில் இடப் பற்றாக்குறையால், நெரிசல் நிலவியது.
இதற்கு தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 88.52 ஏக்கர் பரப்பில், புதிய பேருந்து முனையம் அமைக்க, 2012ல் முடிவு செய்யப்பட்டு, 2019ல் பணிகள் துவக்கப்பட்டன.
393.74 கோடி செலவில் பணிகள் முடிவடைந்து, 2023 டிசம்பரில் பேருந்து முனையம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
இதையடுத்து, பேருந்து பயணியர் கோரிக்கையை ஏற்று, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே, ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என, மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தியது.
அதன்படி, வண்டலுார் மற்றும் ஊரப்பாக்கம் ரயில் நிலையங்கள் இடையே, கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகளை, ரயில்வே நிர்வாகம், 2024 மார்ச்சில் துவக்கியது.
இந்நிலையில், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தையும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையும் நேரடியாக இணைக்கும் வகையில், 280 மீ., நீளத்தில், கூரையுடன் கூடிய உயர்மட்ட நடைபாதை அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது.
தொடர்ந்து, உயர்மட்ட நடைபாதை அமைக்க, 79 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகளை சி.எம்.டி.ஏ., நிர்வாகம், 2024 நவம்பரில் துவக்கியது.
உயர்மட்ட நடைபாதை அமைப்பதற்காக கையகப்படுத்த முடிவு செய்யப்பட்ட தனியார் நிலத்திற்கு, சந்தை மதிப்பில் இழப்பீட்டுத் தொகை கோரப்பட்டதால், பணியில் சுணக்கம் நிலவுகிறது.
தற்போது, மத்திய அரசின் சார்பில் நடைபெறும் ரயில் நிலைய நடைமேடை அமைக்கும் பணிகள் ஆமை வேகத்திலும், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் உயர்மட்ட நடைபாதை பணிகள், நத்தை வேகத்திலும் நடக்கின்றன.
இதனால், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் நடப்பாண்டிற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவது கேள்விக்குறியாக உள்ளதாக என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தலா 6 கோடி ரூபாயில் இரண்டு நடைமேடைகள், மழைநீர் வடிகால் உள்ளிட்ட இதர கட்டுமானங்கள் 10 கோடி ரூபாய் என, மொத்தம் 22 கோடி ரூபாய் செலவில், கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் கட்டுமான பணிகள், கடந்த ஆண்டு துவக்கப்பட்டன.
இதில், தாம்பரம் -- செங்கல்பட்டு மார்க்கத்தில் அமைக்கப்படும் நடைமேடை பணிகள், தற்போது வரை 60 சதவீதம் என்ற அளவில் தான் முடிக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு -- தாம்பரம் மார்க்கத்திற்கான நடைமேடை பணிகள், இன்னும் துவக்கப்படவே இல்லை.
இரண்டு நடைமேடை அமைக்கும் பணிகள் முடிந்த பின், அந்த இரண்டு நடைமேடைகளையும் இணைக்கும் வகையில், உயர்மட்ட நடைபாதையை, ரயில்வே நிர்வாகம் அமைக்க வேண்டும்.
அதன் பின் மின் இணைப்பு, பயணச் சீட்டு அலுவலகம், பயணியருக்கான அமரும் இருக்கை உள்ளிட்ட அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
இதற்கிடையில், ரயில் நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை, 280 மீ., நீளத்திற்கு, தமிழக அரசால் அமைக்கப்படும் உயர்மட்ட நடைபாதை பணிகளும் முடிக்கப்பட வேண்டும்.
இந்த உயர்மட்ட நடைபாதையில், தனியார் வசம் உள்ள 190 மீ., நீளமுள்ள இடத்தை கையகப்படுத்துவதில், பல சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் நடப்பு ஆண்டிற்குள் முடிந்து விடும் என்பது சந்தேகம் தான்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை, 15 அடி அகலம், 150 மீ., துாரம் உள்ள மனுநீதி சோழன் தெரு உள்ளது. இந்த தெரு வழியாக உயர்மட்ட நடைபாதை அமைக்க திட்டமிட்டிருக்கலாம்.
தவிர, இத்தெருவின் அடியில் சுரங்கம் அமைத்தும், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வருவதற்கு பாதை அமைத்திருக்கலாம்.
ஆனால், ஒதுக்குப்புறம் உள்ள தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் உயர்மட்ட நடைபாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இது, பலவித சந்தேகங்களை எழுப்புகிறது.
- தமிழக நெடுஞ்சாலைத் துறை அதிகாரி.