/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊழல் புகார் கூறிய கவுன்சிலர்கள் 'பல்டி' ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவிக்கு ஆதரவு
/
ஊழல் புகார் கூறிய கவுன்சிலர்கள் 'பல்டி' ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவிக்கு ஆதரவு
ஊழல் புகார் கூறிய கவுன்சிலர்கள் 'பல்டி' ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவிக்கு ஆதரவு
ஊழல் புகார் கூறிய கவுன்சிலர்கள் 'பல்டி' ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவிக்கு ஆதரவு
ADDED : அக் 05, 2024 12:11 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி தலைவியாக, தி.மு.க.,வைச் சேர்ந்த பவானி உள்ளார். இவர் மீது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, 12 கவுன்சிலர்கள் கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.
அதில், 'ஊராட்சியில் அடிப்படை வசதிகள் நடக்கவில்லை. ஆனால், பணிகள் செய்ததாக தீர்மானம் நிறைவேற்றாமல், காசோலையில் கையொப்பமிட்டு பண மோசடி செய்துள்ளார்' என குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட திட்ட இயக்குனர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஊராட்சி தலைவி பண மோசடி செய்தது உறுதியானது.
தொடர்ந்து, கலெக்டர் உத்தரவின்படி, காசோலையில் கையெழுத்திடும் ஊராட்சி தலைவியின் அதிகாரம் பறிக்கப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ததில், 33 லட்சம் மோசடி செய்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
அதனால், ஊராட்சி தலைவி மற்றும் துணை தலைவியின் பதவி பறிப்பு தொடர்பாக, கருத்து கேட்பு கூட்டம் நடத்த, வண்டலுார் தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை கருத்து கேட்கும் கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி தலைவி உள்ளிட்ட 15 கவுன்சிலர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா தலைமை வகித்தார்.
காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் மற்றும் துணை வட்டாட்சியர் பங்கேற்றனர். இதில், 11 பேர் தலைவிக்கு ஆதரவாகவும் நான்கு பேர் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா கூறியதாவது:
கலெக்டர் உத்தரவின்படி கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை, கலெக்டருக்கு அனுப்பி வைப்போம்.
ஊராட்சி தலைவி மற்றும் துணை தலைவி ஆகியோர் பதவியில் நீடிப்பது தொடர்பாக, கலெக்டர் முடிவெடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.