/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் ஆலை கட்டுமானத்திற்காக பனை மரங்கள் வெட்டி அழிப்பு?
/
குடிநீர் ஆலை கட்டுமானத்திற்காக பனை மரங்கள் வெட்டி அழிப்பு?
குடிநீர் ஆலை கட்டுமானத்திற்காக பனை மரங்கள் வெட்டி அழிப்பு?
குடிநீர் ஆலை கட்டுமானத்திற்காக பனை மரங்கள் வெட்டி அழிப்பு?
ADDED : அக் 05, 2024 12:14 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த பேரூரில், கடல்நீரில் இருந்து குடிநீர் உற்பத்தி செய்யும் ஆலைக்காக 4,276 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமான பணிகள் நடக்கிறது.
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நடக்கும் பணிக்காக, ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ் இயங்கும், மாமல்லபுரம் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 85 ஏக்கர் நிலம், நீண்டகால குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது.
இந்நிலத்தில் வனத்துறை வளர்த்த சவுக்கு மரங்களை வெட்ட, தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்திற்கு, அறக்கட்டளை நிர்வாகம் ஒப்பந்தம் அளித்து, மரங்கள் முற்றிலும் வெட்டப்பட்டன.
ஆலை வளாக பகுதிக்குள் உள்ள மயான பகுதியை, ஆலை பகுதியிலிருந்து தனியே பிரிக்கும் வகையில், தனிப்பாதை ஒதுக்கி பிரத்யேக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.
இந்த மயான பகுதியை ஒட்டியும், ஆலை பகுதியிலும் உயரம் குறைவான பனை மரங்கள் இருந்தன. அவற்றில் ஐந்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நுழைவாயில் பகுதி அருகில், கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி நின்ற பனை மரமும் 10 நாட்களுக்கு முன் வெட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:
மாநில மரமான பனையை வெட்ட, அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். அவர் மரங்களை பார்வையிட்டு, வெட்டுவதற்கு அவசியம் உள்ளதா என ஆய்வு செய்த பிறகே, மரம் வெட்டுவது குறித்து முடிவெடுப்பார். ஆனால், ஆலை அமைய உள்ள பகுதியில், அரசு அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து, ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் கூறியதாவது:
அறக்கட்டளை நிலத்தில், பெரும்பாலும் சவுக்கு மரங்கள் மட்டுமே வளர்க்கப்பட்டன. சில பனை மரங்கள் இருந்திருக்கலாம். நாங்கள் கவனித்ததில்லை.
பசுமை தீர்ப்பாய அனுமதி பெற்றே, சவுக்கு மரங்களை வெட்டினோம். பனை மரங்கள் ஏதேனும் இருந்து, ஆலைப் பணிக்காக அனுமதியின்றி வெட்டப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.