/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முழு கொள்ளளவு நிரம்பிய தடுப்பணைகள் கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
/
முழு கொள்ளளவு நிரம்பிய தடுப்பணைகள் கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
முழு கொள்ளளவு நிரம்பிய தடுப்பணைகள் கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
முழு கொள்ளளவு நிரம்பிய தடுப்பணைகள் கடலுக்கு பாய்கிறது உபரிநீர்
ADDED : அக் 23, 2025 10:34 PM

மாமல்லபுரம்:பாலாற்று தடுப்பணைகள் நிரம்பியதால், வாயலுார் முகத்துவார தடுப்பணையில், உபரிநீர் கடலுக்குள் பாய்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு, தமிழகத்தில் வேலுார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட பகுதிகள் வழியே கடக்கிறது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் இடையே, வங்க கடலில் கலக்கிறது.
ஆற்றங்கரை பகுதிகளின் விவசாய பாசனம், பல்வேறு பகுதிகளின் கூட்டு குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றின் நீராதாரமாக, பாலாறு உள்ளது.
ஆற்றில் பெருக் கெடுக்கும் மழைநீரை தேக்கி வைக்க, தடுப்பணை அமைக்குமாறு, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அணுசக்தி துறை நிதி பங்களிப்பில், வாயலுார் - கடலுார் ஆற்றுப் படுகையில், ஒரு டி.எம்.சி., கொள்ளளவு தடுப்பணை, கடந்த 2019ல் அமைக்கப்பட்டது.
மேலும், திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் - ஈசூர் பாலாற்றுப் படுகையில், அதே கொள்ளளவில், மற்றொரு தடுப்பணையையும் அரசு அமைத்தது.
ஒவ்வொரு ஆண்டும், இரண்டு தடுப்பணைகளிலும் முழுதும் நீர் நிரம்பி, உபரிநீர் கடலுக்கு பாயும். தற்போது பெய்யும் கனமழையால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.
தடுப்பணைகளும் நிரம்பின. அதன்படி, முகத்துவார பகுதி வாயலுார் தடுப்பணையில், கடந்த வாரம் உபரிநீர் வழிய துவங்கி, நேற்று வினாடிக்கு, 1.33 லட்சம் கன அடி வீதம், உபரிநீர் வெளியேறியதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
34 ஏரிகள் நிரம்பின செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில், 528 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 589 ஏரிகள், 2,512 குளங்கள் உள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்த மழையில், நீர் வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 34 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி, நேற்று வழிந்தன. மற்ற ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது.
இதுமட்டும் இன்றி ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 589 ஏரிகள் மற்றும் 2,512 குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. இதைத்தொடர்ந்து, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை பொதுப்பணித் துறை, வருவாய்த் துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று, ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்கள் கண்காணிக்கும் பணியில், உள்ளாட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

