/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உடைந்த மின் கம்பங்களால் கருநிலத்தில் விபத்து அபாயம்
/
உடைந்த மின் கம்பங்களால் கருநிலத்தில் விபத்து அபாயம்
உடைந்த மின் கம்பங்களால் கருநிலத்தில் விபத்து அபாயம்
உடைந்த மின் கம்பங்களால் கருநிலத்தில் விபத்து அபாயம்
ADDED : அக் 26, 2024 01:15 AM

மறைமலை நகர்:-காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கருநிலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக்கிராம மக்கள், விவசாயம் மற்றும் கூலிவேலை செய்து வருகின்றனர்.
இந்த கிராமத்திற்கு, சிங்கபெருமாள் கோவில் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, முக்கிய சாலை மற்றும் தெருக்களின் ஓரங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், உடைந்து சிதிலமடைந்து சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து காணப்படுகின்றன.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:
இந்த கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பங்கள், பல இடங்களில் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மின் ஒயர்கள் மீது, பல இடங்களில் செடி, கொடிகள் படர்ந்துள்ளதால், அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால், மின் கம்பங்கள் உடைந்து மின் விபத்து ஏற்படுமோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அதிக வாகனங்கள் மற்றும் பொது மக்கள் சென்று வரும் பகுதியில், மின் கம்பங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், மின் விபத்து ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. மின் வாரிய அலுவலகத்தில் முறையிட்டும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, மின் கம்பங்களை அகற்றவும், முறையாக பராமரிப்பு பணிகளை செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.