/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லபுரம் - மரக்காணம் வழித்தடத்தில்... கடலோர சுற்றுலா தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு
/
மாமல்லபுரம் - மரக்காணம் வழித்தடத்தில்... கடலோர சுற்றுலா தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு
மாமல்லபுரம் - மரக்காணம் வழித்தடத்தில்... கடலோர சுற்றுலா தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு
மாமல்லபுரம் - மரக்காணம் வழித்தடத்தில்... கடலோர சுற்றுலா தனியார் பங்களிப்புடன் செயல்படுத்த முடிவு
ADDED : மார் 21, 2025 11:26 PM

மாமல்லபுரம், மாமல்லபுரம் - மரக்காணம் கடலோர பகுதியில், தனியார் பங்களிப்புடன் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தி, கடலோர சுற்றுலா வழித்தடமாக மேம்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம் - இடைக்கழிநாடு இடையே, இயற்கைச்சூழல் கொண்ட கடலோர பகுதி உள்ளது. மாமல்லபுரத்தை பொறுத்தவரை, சர்வதேச முக்கியத்துவம் பெற்ற சுற்றுலா இடமாக விளங்குகிறது.
இங்குள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களை, உள்நாடு மட்டுமின்றி, சர்வதேச பயணியரும் வந்து ரசிக்கின்றனர்.
தற்போது சுற்றுலா மேம்பட்டு, பயணியர் வருகை அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலா மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளன.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தில், நெதர்லாந்து நாட்டு வணிகர்கள் உருவாக்கிய 'டச்சுக்கோட்டை' வளாகம் உள்ளது. கி.பி. 17ம் நுாற்றாண்டில், 'டச்சு' எனப்படும் நெதர்லாந்து நாட்டு வணிகர்கள் இங்கு குடியேறி, கோட்டை அமைத்து, கடல்வழி வாணிபத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கிலேயர் படையெடுத்து, கோட்டையை அழித்தனர். சிதைவுற்ற சில கட்டடங்கள், சுற்றுச்சுவர் ஆகியவையே தற்போது மிஞ்சியுள்ளன.
இங்கு, டச்சு பிரபலங்களின் கல்லறைகளும் உள்ளன. தற்போது, மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், இந்த கோட்டை உள்ளது.
கூவத்துார் அடுத்த முதலியார்குப்பம் பகுதியில், பகிங்ஹாம் கால்வாய் நீர் பரப்பில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மழைத்துளி படகு குழாமை நடத்துகிறது.
இங்கு மிதி படகு, மோட்டார் படகு, குழுவினர் படகு உள்ளிட்ட படகுகள் உள்ளன. கால்வாயில் படகில் நீண்ட துாரம் கடக்கும் போது, கரையோரம் அழகிய கடற்கரை மணற்பரப்பு, பசுமை தென்னந்தோப்புகளை ரசிக்கலாம்.
மேலும், கடற்கரையில் இளைப்பாறி திரும்பலாம். விடுமுறை நாட்களில், படகுகளில் பயணியர் சவாரி செய்ய திரண்டு, சுற்றுலா களைகட்டுகிறது.
இடைக்கழிநாடு ஆலம்பரை பகுதி, வங்கக் கடலும், பகிங்ஹாம் கால்வாய் முகத்துவாரமுமாக அமைந்துள்ளது.
இப்பகுதியில், 18ம் நுாற்றாண்டு கால முகமதியரின் வாணிப துறைமுகம், படகு துறை ஆகியவை செயல்பட்டன. வர்த்தக கோட்டை அமைத்து, கடல்வழி வாணிபத்தில் ஈடுபட்டனர்.
ஆங்கிலேயர் படையெடுப்பில் இங்கிருந்த கோட்டை அழிக்கப்பட்டு, தற்போது சிதைந்த சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது.
தமிழக தொல்லியல் துறை கட்டுப்பாட்டில், இந்த கோட்டை வளாகம் உள்ளது.
கடந்த 2020ல், சீரழிந்த இந்த சுற்றுச்சுவரை தொல்லியல் துறை புனரமைத்து பாதுகாக்கிறது.
கல்பாக்கம் அடுத்த வாயலுார் - கடலுார் பாலாற்றில், கடந்த 2019ல் நீர் செறிவூட்டல் தடுப்பணை கட்டப்பட்டது. பருவமழை தவறாமல் பெய்யும் சூழலில், ஆண்டு முழுதும் நீர் நிரம்பி, ரம்மியமாக உள்ளது.
புதுச்சேரி சாலையில் செல்வோர், இந்த தடுப்பணைக்கு சென்று ரசிக்கின்றனர்.
இவ்வாறு, மாமல்லபுரம் - மரக்காணம் இடையே உள்ள கடற்கரை, கோட்டைகள் உள்ளிட்டவை சுற்றுலாப் பயணியரை ஈர்த்து, விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கிற்கு அதிகமாக குவிகின்றனர்.
இப்பகுதிகளில், கடற்கரை விடுதிகளும் அதிகரிக்கின்றன. இடைக்கழிநாடு பகுதியில் தென்னந்தோப்புகள் நிறைந்து, பசுமையாக வசீகரிக்கின்றன.
ஓதியூர் பகுதியில், பகிங்ஹாம் நீர்பரப்பு கடல்போல் காட்சியளிக்கிறது. மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே, தேசிய நெடுஞ்சாலை, நான்குவழிப் பாதையாக தற்போது மேம்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில், தனியார் பங்களிப்புடன் சுற்றுலாவை மேம்படுத்த, தமிழக அரசு முடிவெடுத்து உள்ளது. அதற்காக, கடலோர சுற்றுலா வழித்தடமாக அறிவித்து, மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த, தற்போது சட்டசபையில் அறிவித்து உள்ளது.