/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிற்றுந்துகள் இயக்க அனுமதி கிடைப்பதில்...தாமதம்:செங்கையில் சேவை துவங்காததால் அதிருப்தி
/
சிற்றுந்துகள் இயக்க அனுமதி கிடைப்பதில்...தாமதம்:செங்கையில் சேவை துவங்காததால் அதிருப்தி
சிற்றுந்துகள் இயக்க அனுமதி கிடைப்பதில்...தாமதம்:செங்கையில் சேவை துவங்காததால் அதிருப்தி
சிற்றுந்துகள் இயக்க அனுமதி கிடைப்பதில்...தாமதம்:செங்கையில் சேவை துவங்காததால் அதிருப்தி
ADDED : ஜூன் 12, 2025 02:38 AM

செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டத்தில், புதிதாக 50 'மினி பஸ்' என்னும் சிற்றுந்துகள் இயக்க தனியாருக்கு வழித்தட அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே 1ம் தேதியில் இருந்து சிற்றுந்துகள் இயக்கப்படும் என அறிவித்த நிலையில், இன்னும் சேவை துவங்காததால், அதிருப்தி நிலவுகிறது.
தமிழகம் முழுதும், 1999ம் ஆண்டு, நகரப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு, சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், கடந்த சில ஆண்டுகளாக, கிராமங்களுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டன.
பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது, தமிழகம் முழுதும் நகர்ப்புறங்களை இணைக்கும் வகையில், கிராமப்புறங்களுக்கு சிற்றுந்துகள் இயக்க, தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அரசுக்கு கோரிக்கை
நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படும் நிலையில், சட்ட விதிகளுக்கு புறம்பாக, 10க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்கின்றனர்.
அத்துடன், இந்த ஷேர் ஆட்டோக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, பலர் படுகாயமடைகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய சிற்றுந்து திட்டம் குறித்து தமிழக அரசிதழில், கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதுகுறித்து, மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, கருத்து தெரிவித்தனர்.
இதையேற்று, 50 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கும் புதிய திட்டத்திற்கு, தமிழக அரசு கடந்த ஜன., 24ம் தேதி அனுமதி அளித்தது.
சிற்றுந்துகள் இயக்குவதற்கு வழித்தட அனுமதி பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கு, மாவட்ட அரசிதழில், கடந்த பிப்., 12ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
செங்கல்பட்டு, தாம்பரம், சோழிங்கநல்லுார் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 50 வழித்தடங்களுக்கு, நுாறுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
கோரிக்கை
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில், சிற்றுந்துகள் இயக்க வழித்தட அனுமதி கோரிய விண்ணப்பங்கள், குலுக்கல் முறையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அதன் பின், 50 வழித்தடங்களுக்கான அனுமதி ஆணையை சிற்றுந்து உரிமையாளர்களுக்கு கலெக்டர் வழங்கினார்.
மேலும், புதிய வழித்தடங்கள் கண்டறிந்து, அந்தந்த இடங்களுக்கு சிற்றுந்துகள் செல்வதற்கான வழிகளை செய்ய வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
அத்துடன், அனுமதி பெற்ற வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க, உரிமையாளர்களுக்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. கடந்த மே 1ம் தேதி முதல், சிற்றுந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சிற்றுந்து உரிமையாளர்களுக்கு, சிற்றுந்துகள் இயக்குவதற்கான அனுமதி வழங்குவது கிடப்பில் போடப்பட்டுள்ளதால், சேவையை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஆரம்பத்தில் சிற்றுந்துகள் இயக்கிய உரிமையாளர்கள் சிலர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், சிற்றுந்துகள் இயக்குவதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், சிற்றுந்து சேவையை துவக்க அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, சிற்றுந்துகள் இயக்க விரைந்து அனுமதி வழங்கி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சேவையை துவக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
'மினி பஸ்' எனும் சிற்றுந்துகள் இயக்க, ஏற்கனவே வழித்தட அனுமதி ஆணை வழங்கப்பட்டது. கடந்த மே 1ம் தேதி சிற்றுந்து இயக்கம் துவங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், சிற்றுந்துகள் இயக்குவதற்கான அனுமதி இன்னும் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை. சிற்றுந்து இயக்கம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் தான், தாமதம் ஏற்படுகிறது. இதுகுறித்து, அரசு தான் அறிவிப்பு வெளியிட வேண்டும்.
- வட்டார போக்குவரத்து அலுவலர்கள்,
செங்கல்பட்டு