/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் அதிகரிக்க கோரிக்கை
/
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் அதிகரிக்க கோரிக்கை
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் அதிகரிக்க கோரிக்கை
காட்டாங்கொளத்துார் ஒன்றிய பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் அதிகரிக்க கோரிக்கை
ADDED : மார் 22, 2025 11:25 PM

காட்டாங்கொளத்துார்,
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இங்குள்ள 39 ஊராட்சிகளில், 170 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இதில் 3,330 குழந்தைகள் பயில்கின்றனர்.
தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தில் இருந்து, ஏழை எளியோரை விடுவிக்க, அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்தி, எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தனியார் பள்ளிகள் ஆதிக்கத்தால், அங்கன்வாடி மையங்களில் உள்ள சிறப்புகள், பலருக்கும் தெரிவதில்லை. தனியார் பள்ளிகளில், 'ப்ரி கேஜி', 'எல்கேஜி', 'யுகேஜி' ஆகிய, முன் பருவக் கல்விக்கு, கட்டணமாக 10, 000 ரூபாய் முதல் லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் அங்கன்வாடி மையங்களில் எவ்விதக் கட்டணமும் கிடையாது.
நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பத்தினருக்கு, அங்கன்வாடி மையங்கள் வரப்பிரசாதம். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்கள் தவிர்த்து, வாரத்தின் 6 நாட்களும் இவை செயல்படுகின்றன.
தவிர, அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு, தினசரி இரு வேளை ஊட்டச் சத்துடன் கூடிய உணவும், வாரத்திற்கு மூன்று நாட்கள் முட்டையும் வழங்கப்படுகிறது. ஆண்டிற்கு இரு சீருடைகள் இலவசம்.
மக்கள் தொகை கணக்குப்படி, 1,000 நபர்கள் வசிக்கும் பகுதிக்கு ஓர் அங்கன்வாடி மையம் செயல்பட வேண்டும். 1.000க்கு குறைவான மக்கள் தொகை உள்ள இடங்களில் 'மினி' அங்கன்வாடி மையங்கள் செயல்பட வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை.
எனவே, காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில், அந்தந்த ஊராட்சியின் மக்கள் தொகைக்கு ஏற்ப, அங்கன்வாடி மையங்கள் கூடுதல் எண்ணிக்கையில் திறக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.