/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஏரி வேலை வழங்கக்கோரி கொளத்துாரில் ஆர்ப்பாட்டம்
/
ஏரி வேலை வழங்கக்கோரி கொளத்துாரில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 21, 2024 01:51 AM

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 23 - கொளத்துார் ஊராட்சியில், ஆயகுணம், புத்தமங்கலம், மேட்டுகொளத்துார், பள்ளக்கொளத்துார் உள்ளிட்ட, நான்கு கிராமங்கள் உள்ளன.
ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களில், 500க்கும் மேற்பட்டோர் மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிதி ஆண்டில், இந்த ஊராட்சியில் ஏழு நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டதாகவும், குளம் மற்றும் பண்ணைக் குட்டை அமைக்க இடம் தேர்வு செய்யப்படாததால், வேலை நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி, நேற்று காலை ஊராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மக்கள் திரண்டனர்.
அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவிற்கு அந்த வழியாக சென்ற, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம் ஊராட்சி அலுவலகம் முன் திரண்டிருந்த மக்களுடன் இணைந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுபாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, முறையாக துறை சார்ந்த அலுவலர்களிடம் மனு அளிக்க வலியுறுத்தியதை அடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.