/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கருங்குழி ரேஷன் கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
/
கருங்குழி ரேஷன் கடையை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 25, 2024 12:15 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கருங்குழி பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 14, 15வது வார்டு பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் அரிசி, சர்க்கரை பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நியாய விலைக் கடையில் பெற்று வந்தனர்.
நியாய விலை கடை பராமரிப்பு பணிக்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டு, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
பின், பராமரிப்பு பணி முடிந்த பின், பழைய கட்டடத்திலேயே ஒன்றரை ஆண்டுகளாக, வழக்கம்போல் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன், திடீரென நியாய விலை கடை கட்டடத்தை மூடிவிட்டு, மாற்று இடத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கி வருகின்றனர்.
இதனால், அப்பகுதிவாசிகள் இரண்டு கி.மீ., துாரம் நடந்து சென்று, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக, பொருளாதார இழப்பு மற்றும் கால விரயம் ஏற்படுவதாக அப்பகுதிவாசிகள் குற்றம் தெரிவிக்கின்றனர்.
எனவே, எட்டு மாதங்களாக பூட்டப்பட்டு கிடக்கும் நியாய விலை கடை கட்டடத்தை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி, நேற்று, 50க்கும் மேற்பட்டோர் நியாய விலை கடை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின், மதுராந்தகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, விரைவில் நியாய விலை கடை கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, போலீசார் உறுதியளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.