/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22 கோடியில் மேம்பாட்டு பணி
/
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22 கோடியில் மேம்பாட்டு பணி
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22 கோடியில் மேம்பாட்டு பணி
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22 கோடியில் மேம்பாட்டு பணி
ADDED : ஜன 01, 2025 12:16 AM

செங்கல்பட்டு,செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், 'அம்ரித் பாரத்' திட்டத்தில் 22.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை புறநகரில் செங்கல்பட்டு ரயில் நிலையம் பிரதான நிலையமாகும். இதன் வழியாக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு, விரைவு ரயில் சென்று வருகின்றன.
செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும், அத்தியாவசிய பணிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினமும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சென்று வருகின்றனர்.
இந்த ரயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் ஆகியவை தனியாக உள்ளன.
இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ரயில் நிலைய நடைமேடை பகுதியில் கூரைகள், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் உட்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென, ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம், ரயில் பயணியர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணி மேற்கொள்ள, 'அம்ரித் பாரத்' திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கு, 'டெண்டர்' விடப்பட்டது.
இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக, 2023 ஜூலை 12ம் தேதி துவக்கி வைத்தார்.
இதையடுத்து, இப்பணிகளை ஒப்பந்ததாரர்கள் விரைவாக முடிக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
அதன் பின், ரயில் நிலைய வளாகத்தில் முழுமையாக பணிகள் மேற்கொள்ள, பயணியருக்கு மாற்று பாதை அமைக்கப்பட்டது. அதன் பின் பணிகள் துவங்கி, ரயில் நிலையத்திலுள்ள எட்டு நடைமேடைகளில் கூரை மீது 'சோலார் பேனல்' அமைத்தல், தரையில் சிமென்ட் கற்கள் பதித்தல், முதலாவது நடைமேடை, எட்டாவது நடைமேடை பகுதியில், தலா ஒரு மின் துாக்கிகள் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
அத்துடன், நுழைவாயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், டிக்கெட் கவுன்டர் அருகில், வாகன நிறுத்தம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்தமாக தற்போது, 60 சதவீத பணிகள் முடிந்துள்ளன. மற்ற பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ரயில் நிலையத்திற்கு பயணியர் அதிகமாக செல்வதால், கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்களை நிறுத்த முடியாமல், பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே, ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு ரயில் நிலைய வளாகத்தில், 'அம்ரித்' திட்டத்தில் பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், வாகனங்களை நிறுத்தும் வசதி சரிவர இல்லை. அத்துடன், தற்போது பணிகளால் பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடித்து, பயணியரின் சிரமத்தை போக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.ரங்கன்,
செங்கல்பட்டு.