/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாபுராயன் பேட்டை ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
/
பாபுராயன் பேட்டை ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
பாபுராயன் பேட்டை ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
பாபுராயன் பேட்டை ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
ADDED : ஜன 19, 2025 02:21 AM
அச்சிறுபாக்கம், பாபுராயன் பேட்டை ஊராட்சியில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, எந்த பணியும் ஒதுக்கீடு செய்யவில்லை என, கலெக்டரிடம் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.
பாபுராயன் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் நவநீதம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
என் ஊராட்சியில் நீண்ட நாள் கோரிக்கையாக சுடுகாடு பாதை, புதிய நியாய விலை கட்டடம், ஊராட்சிமன்ற கட்டடம், கழிவுநீர் கால்வாய், மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் போன்றவை அடிப்படை தேவையாக உள்ளது.
தற்போது, பாபுராயன் பேட்டை ஊராட்சி முன்மாதிரி கிராமமாக தேர்வாகி உள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், எந்த ஒரு கட்டட பணிகளும், அடிப்படை தேவைகளுக்கு ஏற்றவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர்கள், பற்றாளர்கள் என, என் ஊராட்சிக்கு எந்த ஒரு வளர்ச்சி பணியும் ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.
மேலும், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 2023-- 2024 ல் 12.53 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
சாலை அமைக்க தரை சமன்படுத்தும் பணிமுடித்து விட்டோம். திடீரென வட்டார வளர்ச்சி அலுவலர், பணி ஆணையை திரும்ப பெற்றுக்கொண்டார்.
பொதுமக்கள் அடிப்படை தேவையான மயானபாதை, சிமென்ட் சாலை அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர்கள் மற்றும் பற்றாளர்கள் ஆகியோரிடம் மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
எங்கள் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் அதிகம் வசிப்பதால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம்.
இது குறித்து, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

