/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அச்சிறுபாக்கத்தில் பொறியாளர் பற்றாக்குறை ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
/
அச்சிறுபாக்கத்தில் பொறியாளர் பற்றாக்குறை ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
அச்சிறுபாக்கத்தில் பொறியாளர் பற்றாக்குறை ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
அச்சிறுபாக்கத்தில் பொறியாளர் பற்றாக்குறை ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் பாதிப்பு
ADDED : மே 15, 2025 06:48 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, 59 ஊராட்சிகள் உள்ளன.
அதில், தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் வாயிலாக செயல்படுத்தப்படும் கட்டுமான பணிகள் உள்ளிட்டவை, தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோன்று, 15வது நிதிக் குழு, மாவட்ட கவுன்சிலர் நிதி மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர் நிதி வாயிலாக அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை கட்டடம், சிமென்ட் கல் சாலை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
* பற்றாக்குறை
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 59 ஊராட்சிகளுக்கு, 15 ஊராட்சிக்கு ஒரு பொறியாளர் வீதம், நான்கு பொறியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
தற்போது, இரண்டு பொறியாளர்கள் பணியிட மாறுதல் பெற்றுச் சென்றுள்ளனர்.
இருவர் மட்டுமே பணியில் உள்ளனர்.
அதனால், 59 ஊராட்சிகளிலும் நடைபெறும் பணிகளை பார்வையிட முடியாத நிலை உள்ளது.
* தரமற்ற பணி
பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், பணிகளை செய்ய ஒப்பந்தம் எடுத்த நபர்கள், விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களிலும் சிறிய பாலங்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நுாலக கட்டடங்கள், அங்கன்வாடி மையங்கள், இருளர் குடியிருப்புகள் கட்டுமானத்திற்கு கான்கிரீட் கலவையால் தளம் ஒட்டுதல் உள்ளிட்ட பணிகளை, பொறியாளர்கள் இல்லாமல் மேற்கொள்கின்றனர்.
அதனால், தரமற்ற முறையில் கட்டடங்கள் கட்டப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, கலெக்டர் உள்ளிட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகள், இதுகுறித்து உரிய ஆய்வு செய்து, அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு பொறியாளர்களை நியமிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.