/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோதுமை பற்றாக்குறையால் சர்க்கரை நோயாளிகள் பாதிப்பு
/
கோதுமை பற்றாக்குறையால் சர்க்கரை நோயாளிகள் பாதிப்பு
கோதுமை பற்றாக்குறையால் சர்க்கரை நோயாளிகள் பாதிப்பு
கோதுமை பற்றாக்குறையால் சர்க்கரை நோயாளிகள் பாதிப்பு
ADDED : நவ 09, 2025 11:24 PM
வண்டலுார்: வண்டலுார் தாலுகாவில், குடும்ப அட்டைகளுக்கு கோதுமை வழங்கப்படுவதில்லை என, பல தரப்பிலிருந்தும் புகார் வந்துள்ளது.
வண்டலுார் தாலுகாவில், கூடுவாஞ்சேரி நகராட்சி மற்றும் 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு, 71 ரேஷன் கடைகள் வாயிலாக, 84,535 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர்.
குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு குடும்ப அட்டைக்கு அதிகபட்சமாக இரண்டு கிலோ கோதுமை, விலையில்லாமல் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ஒவ்வொரு கடையிலும், 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தலா ஒரு கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுவதில்லை என, புகார் வந்துள்ளது.
மக்கள் கூறியதாவது:
சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாத குடும்பங்களே இல்லை என்ற சூழல் வந்துவிட்டதால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் கோதுமை உணவு அவசியமாகி விட்டது.
கடந்த ஆண்டு வரை, ரேஷன் கடைகளில், ஒரு குடும்ப அட்டைக்கு இரண்டு கிலோ கோதுமை வழங்கப்பட்டு வந்த நிலையில், நடப்பாண்டு துவக்கத்தில், ஒரு கிலோ என குறைக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக அதுவும் வழங்கப்படுவதில்லை.
கடை ஊழியரிடம் கேட்கும் போதெல்லாம், கோதுமை வரவில்லை என்றே பதில் வருகிறது. ஒரு வேளை தனியார் மசாலா மற்றும் கோதுமை விற்பனை நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறதோ என, சந்தேகம் வருகிறது. ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் கோதுமை தட்டுப்பாடால், சர்க்கரை நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வட்ட வழங்கல் அதிகாரி கூறியதாவது:
குடும்ப அட்டைகளுக்கு வினியோகிக்கப்படும் இலவச கோதுமை, மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
கடந்த ஆறு மாதமாக 1,000 குடும்ப அட்டைகளுக்கு, 50 கிலோ கோதுமை மட்டுமே வழங்கப்படுகிறது.
இதை தலா ஒரு கிலோ என, 50 குடும்ப அட்டைகளுக்கு, ஒரே நாளில் வினியோகம் செய்கிறோம். இதனால், அடுத்த நாள் வருபவர்களுக்கு கோதுமை இல்லை என்ற நிலை உருவாகிறது.
மத்திய அரசிடம் இருந்து தேவைக்கேற்ப கோதுமை வழங்கப்பட்டால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

