/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
500 பஸ் நிறுத்தங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை : மாநகர பஸ்கள் விபரம் அறிய ஏற்பாடு
/
500 பஸ் நிறுத்தங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை : மாநகர பஸ்கள் விபரம் அறிய ஏற்பாடு
500 பஸ் நிறுத்தங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை : மாநகர பஸ்கள் விபரம் அறிய ஏற்பாடு
500 பஸ் நிறுத்தங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை : மாநகர பஸ்கள் விபரம் அறிய ஏற்பாடு
ADDED : மார் 02, 2024 10:21 PM
சென்னை:மாநகர பேருந்துகள் வந்து செல்லும் நேரத்தை அறியும் வகையில், 71 நிலையங்கள் மற்றும் 500 நிறுத்தங்களில், 'டிஜிட்டல் பலகை' பொருத்தப்படும் என, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 700க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தினமும் 3,454 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 30.70 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
சில சமயம், ஒரே நேரத்தில் வரிசையாக மூன்று பேருந்துகள் செல்கின்றன. சில நேரத்தில், பல்வேறு வழித்தடங்களில் சீரான பேருந்து இயக்கம் இல்லை. அடுத்த பேருந்து எப்போது வரும் என, நிறுத்தங்களில் ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என, பயணியர் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பேருந்துகளை சீராக இயக்கவும், பயணியருக்கான தகவலை அளிக்கவும், 'இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்' எனும் நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தை, மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்த உள்ளது. சோதனை அடிப்படையில், சென்னையின் சில இடங்களில், 'சிட்டி பஸ் சிஸ்டம்' என்ற பெயரில் இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு நிறுவனம் நிதி உதவியுடன், மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில், நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தின் கீழ், 'சிட்டி பஸ் சிஸ்டம்' என்ற புதிய முறையை செயல்படுத்தி வருகிறோம்.
இத்திட்டத்தில் பேருந்துகள் வழித்தடம் அறியும் வசதி, கட்டுப்பாடு அறை, தொடுதிரையுடன் கூடிய இருவழி தொடர்பு, அதாவது கட்டுப்பாட்டு அறையினருடன் ஓட்டுனர் பேசும் வசதி மற்றும் வாகன நகர்வு கண்காணிப்பு ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுஉள்ளது.
அதன்படி, பேருந்துகள் வருகை, புறப்படும் நேரம் குறித்து பயணியர் தகவல் பெறும் வகையில், 500 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் 71 பேருந்து நிலையங்களில் எல்.இ.டி., டிஜிட்டல் பலகை அமைக்கப்படும். அடுத்து வரும் பேருந்து குறித்த தகவலும், ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்படும்.
தவிர, பேருந்துகள் இயக்கப்படும் தடம், நேரம் உள்ளிட்ட விபரங்களையும், தங்களது மொபைல் போன் செயலி வாயிலாகவும், பயணியர் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
'சென்னை சிட்டி பஸ்' எனும் செயலி இருக்கும் வகையில், அதன் மேம்படுத்தப்பட்ட செயலியாக புதிதாக கொண்டு வரப்படும் செயலி செயல்படும். மேலும், மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம், பேருந்துகளை சீராக இயக்குவதோடு, ஒரே வழித்தடத்தில், ஒரே நேரத்தில் மாநகர பேருந்துகள் வரிசையாக இயக்குவதை தவிர்க்க முடியும்.
அதேபோல், பணிமனைகளின் செயல்பாடுகளை ஓட்டுனர்கள், நடத்துனர்கள் குறித்தும் தெரிந்து கொள்ள முடியும். பணியாளர்கள் தங்களது விடுப்பு குறித்து விண்ணப்பிக்கவும், அதில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தில், சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் 50 பேருந்துகளில், இருப்பிடம் அறியும் ஜி.பி.எஸ்., கருவிகள் நிறுவப்பட்டு, பேருந்துகளின் சீராக இயக்கத்தை கண்காணித்து வருகிறோம்.
அடுத்த ஆண்டு ஜூலையில், அனைத்து மாநகர பேருந்துகள், பணிமனைகளில் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

