/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தும் அறிவிப்பு மானிய கோரிக்கையில் இல்லாததால் ஏமாற்றம்
/
கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தும் அறிவிப்பு மானிய கோரிக்கையில் இல்லாததால் ஏமாற்றம்
கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தும் அறிவிப்பு மானிய கோரிக்கையில் இல்லாததால் ஏமாற்றம்
கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தும் அறிவிப்பு மானிய கோரிக்கையில் இல்லாததால் ஏமாற்றம்
ADDED : ஏப் 18, 2025 08:31 PM
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்துவது குறித்து மானிய கோரிக்கையில், எவ்வித அறிவிப்பும் இல்லாதது பக்தர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் கோவில்களில் பக்தர்கள் வருகை, வருமானம் ஈட்டும் திறன் ஆகியவற்றில் முதன்மையாக இருப்பது, திருப்போரூர் கந்தசுவாமி கோவில்.
சென்னை, காஞ்சிபுரம் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசிக்கின்றனர்.
குறிப்பாக கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களிலும், செவ்வாய்கிழமை தோறும் பக்தர்களின் வருகை அதிகரிக்கிறது.
இக்கோவிலுக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் கடைகள் உள்ளன.
பக்தர்களின் வருகை அதிகரிப்பு, பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து அதிகரிப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இவற்றுடன் உண்டியல் வருமானம், வாகன நுழைவு கட்டணம், பிரசாத கடை ஆண்டு ஏலம், காணிக்கை முடி ஏலம் ஆகியவற்றால், வருமானம் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, ஒரு ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவில் இருந்த இந்த கோவில், தற்போது 6 கோடி ரூபாய் வருவாய் கோவிலாக மாறியுள்ளது.
மேலும், ஆறுவழி சாலைக்கு கோவில் நிலங்கள் கையகப்படுத்தியதால் 20 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, பக்தர்கள் அதிகளவில் வரவழைப்பதற்காக 3 கோடி ரூபாயில் மதிப்பில் கட்டப்பட்ட, கோவில் சார்ந்த திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் ஓய்வு கூடம் சமீபத்தில் திறக்கப்பட்டது.
வருவாய் பெருகி வரும் இந்த கோவில், சிறப்பு நிலை செயல் அலுவலர் நிலையிலேயே இருக்கிறது.
கடந்த 2009ம் ஆண்டிலிருந்து செயல் அலுவலர் நிலையிலிருந்து, உதவி கமிஷனர் நிலைக்கு தரம் உயர்த்த கோரிக்கைவைக்கப்பட்டு வருகிறது. ஆனால், தரம் உயர்த்த நடவடிக்கை எடுத்தபாடில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் அறிவிப்புகள் வெளியாகும் என காத்திருந்த பக்தர்கள், சமூக ஆர்வலர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பக்தர்கள் கூறியதாவது:
ஹிந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் உதவி கமிஷனர் நிலைக்கு தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகும் என, காத்திருந்தோம். ஆனால், ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த, 15 ஆண்டுகளாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.