/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சியில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டெடுப்பு
/
காஞ்சியில் வில் வீரன் நடுகல் சிற்பம் கண்டெடுப்பு
ADDED : பிப் 26, 2024 12:33 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிக்குப்பம் ஊராட்சி, இந்திரா நகரில், பல நுாறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வில் வீரன் நடுகல் சிற்பம், நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் அன்பழகன் தலைமையில், எம்.ஏ., முதுகலை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் அடங்கிய குழுவினர், காஞ்சிபுரம் ஒன்றியம் கோனேரிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகரில், நேற்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதியில், நிலப்பரப்பிலிருந்து 50 செ.மீ., அளவு உயரம் மட்டும் வெளியில் தெரியும்படி, வில் வீரன் நடுகல் சிற்பம் இருந்ததை கண்டறிந்தனர்.
மண்ணில் புதைந்திருந்த இச்சிற்பத்தை வெளியில் எடுத்து ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து, உதவி பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது:
கோனேரிகுப்பம், இந்திரா நகரில் கண்டெடுக்கப்பட்ட சிலை, 174 செ.மீ., உயரமும், 50 செ.மீ., முன்பக்க அகலம், 20 செ.மீ., பக்கவாட்டு அகலமும் உடையது. இது 64 செ.மீ., அளவில் பீடமும், 77 செ.மீ., அளவில் வில் வீரன் சிற்பமும், தலைக்கு மேல் 33 செ.மீ., அளவு வெற்றுப் பகுதியாகவும் உள்ளது.
வீரனின் இடது கையில் வில் ஒன்றும், வலது கை மணிக்கட்டு உடைந்த நிலையிலும் உள்ளது. கழுத்திலும், தோள்களிலும் அணிகலன்களும், இடைப்பகுதியில் ஆடையும் உள்ளது.
கல்வெட்டு எழுத்துகள் எதுவும் இல்லாத இந்நடுகல் சிற்பத்தின் காலம், கி.பி.15 - 16ம் நுாற்றாண்டாக இருக்கலாம் என அறியப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

