/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியார் மீன் சந்தைக்கு வரும் வாகனங்களால் அவஸ்தை
/
தனியார் மீன் சந்தைக்கு வரும் வாகனங்களால் அவஸ்தை
ADDED : அக் 11, 2024 12:23 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, தைலாவரம் அடுத்த வீரபத்திரன் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையோரம், அடுத்தடுத்து இரண்டு மீன் சந்தைகள் உள்ளன. இவற்றில், 50க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் உள்ளன.
இங்கு மீன் வாங்க வரும் மக்கள், தங்களின் வாகனங்களை ஜி.எஸ்.டி., சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால், வீரபத்திரன் நகரில் இருந்து, அவசர காலங்களில் கூட அப்பகுதிவாசிகள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
குடியிருப்புகளை சுற்றி மீன் கழிவுகள் கொட்டப்படுவதால், முதியோருக்கு சுவாச பிரச்னை மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.
கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களை குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் நிறுத்துவதால், பள்ளி மற்றும் அலுவலகத்திற்கு செல்வோருக்கு, நெரிசல் காரணமாக தாமதம் ஏற்படுகிறது. அடிப்படை சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறன.
மீன் விற்பனை கடைகளில் வேலை பார்க்கும் நபர்கள், திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, தைலாவரம் குறிஞ்சி வீட்டு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, “இந்த கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடி, இந்த பகுதியே துர்நாற்றம் வீசுகிறது. இந்த கழிவுநீரில், பாதசாரிகள் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது,” என்றனர்.