/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமூக விரோதிகளின் கூடாரமான சுரங்கப்பாதை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் அதிருப்தி
/
சமூக விரோதிகளின் கூடாரமான சுரங்கப்பாதை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் அதிருப்தி
சமூக விரோதிகளின் கூடாரமான சுரங்கப்பாதை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் அதிருப்தி
சமூக விரோதிகளின் கூடாரமான சுரங்கப்பாதை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதால் அதிருப்தி
ADDED : நவ 06, 2025 03:04 AM

தாம்பரம்:தாம்பரத்தில், ரயில்வே லைனை கடக்கும் வகையில் கட்டப்பட்ட சுரங்க நடைபாதை, கஞ்சா, விபசாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறிவிட்டதால், பயன்படுத்த முடியாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில், மேற்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து, தினசரி ஏராளமானோர் ரயில்வே லைனை கடந்து, ஆபத்தான வகையில் சென்று வருகின்றனர். இதனால், அவ்வப்போது ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு ஏற்படும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
இதை கருத்தில் கொண்டு, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலையில், ஹிந்து மிஷன் மருத்துவமனை எதிரே, ரயில்வே லைனை கடக்கும் வகையில், சுரங்க நடைபாதை கட்டப்பட்டது. ஆரம்பத்தில் முறையாக பராமரிக்கப்பட்டதால், மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பெண்கள் என, ஏராளமானோர் பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில் பராமரிப்பு மோசமானதால், சமூக விரோத செயல்கள் நடக்கும் பகுதியாக மாறியது. விபசாரம், செயின் பறிப்பு, வழிப்பறி போன்ற குற்ற செயல்கள் அதிகமாக நடந்தன. இதனால், இரவில் பயன்படுத்த மக்கள் அச்சப்பட்டனர்.
ஒரு கட்டத்தில், இச்சுரங்க நடைபாதை மூடப்பட்டது. பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சுரங்க நடைபாதையை சீரமைத்து, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
அப்போது, சமூக விரோத செயல்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு, காலை 6:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும், இரவில் பூட்டப்படும் என்றும், ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
ஆனால், மீண்டும் இச்சுரங்க நடைபாதையை பராமரிக்காததால், பயன்படுத்த முடியாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளது.
மற்றொரு புறம், சுரங்க நடைபாதையினுள் பகலிலேயே கஞ்சா, விபசாரம் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் மீண்டும் அதிகரித்து விட்டன. இதனால், அந்த பக்கம் செல்வதற்கே மக் கள் பயப்படுகின்றனர். இது தெரிந்தும், தாம்பரம் மற்றும் ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
எனவே, இவ்விஷயத்தில், மாநகராட்சி, ரயில்வே, போக்குவரத்து காவல் துறைகள் இணைந்து, சுரங்க நடைபாதையை திறந்து, சமூக விரோத கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, பொதுமக்கள் பாதுகாப்பாக சென்றுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

