/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு சாலையில் அணுகுசாலை பணி தாமதத்தால் அதிருப்தி
/
கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு சாலையில் அணுகுசாலை பணி தாமதத்தால் அதிருப்தி
கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு சாலையில் அணுகுசாலை பணி தாமதத்தால் அதிருப்தி
கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு சாலையில் அணுகுசாலை பணி தாமதத்தால் அதிருப்தி
ADDED : ஜூன் 20, 2025 11:34 PM

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், விடுபட்டுள்ள அணுகு சாலை பணிகள் எப்போது முடிக்கப்படும் என, வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு வரையிலான 29 கி.மீ., துாரமுள்ள ஜி.எஸ்.டி., சாலையில் நுழைதல், வெளியேறுதல் என்ற வகையில், நாளொன்றுக்கு 3 லட்சம் வாகனங்கள் பயணிப்பதாகவும், விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை 5 லட்சம் வரை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சாலை விரிவாக்கம் செய்யப்பட்டாலும், பல இடங்களில் அணுகு சாலைகள் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், பல இடங்களில், எதிர் திசையில் வாகனங்கள் பயணிக்கும் நிலை உள்ளது.
இதனால், விபத்துகளும் தாராளமாக நடந்தேறுகின்றன. தவிர, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் விரைந்து பயணிப்பதிலும், சிக்கல் நிலவுகிறது.
எனவே, அணுகு சாலை பணிகளை முழுமையாக நிறைவேற்றிட, மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சென்னையின் முக்கிய நுழைவாயிலாக உள்ள ஜி.எஸ்.டி., சாலையை, தேசிய நெடுஞ்சாலை துறை பராமரிக்கிறது. இவ்வழியாக முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி பயணிக்கின்றனர்.
இருவழிப் பாதையாக இருந்த ஜி.எஸ்.டி., சாலை, 2004ம் ஆண்டு நான்குவழிப் பாதையாக மாற்றப்பட்டது.
பின், பெருங்களத்துார் முதல் செட்டிபுண்ணியம் வரை எட்டு வழிச் சாலையாகவும், அங்கிருந்து பரனுார் வரை ஆறு வழிச் சாலையாகவும் மாற்றப்பட்டது. பின் அங்கிருந்து செங்கல்பட்டு வரை, நான்கு வழிச் சாலையாகவும் புனரமைக்கப்பட்டது.
அப்போது, சாலையின் இரு பக்கமும் 15 அடி அகலத்தில் அணுகு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு, 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன.
மீதமுள்ள இடங்களில் அணுகுசாலை அமைக்க இடம் ஒதுக்கப்பட்டும், பணிகள் நடக்கவில்லை. அந்த வகையில், 30 சதவீத பணிகள் கிடப்பில் போடப்பட்டன.
குறிப்பாக, மகேந்திரா சிட்டி முதல் மல்ரோசாபுரம் வரை 3 கி.மீ., துாரத்திற்கும், தைலாபுரம் முதல் அய்யஞ்சேரி வரை 6 கி.மீ., துாரத்திற்கும் அணுகுசாலை அமைக்கப்படவில்லை.
இவ்விடங்களில் அணுகு சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை, சாலையோர கடைக்காரர்கள் ஆக்கிரமித்து, தங்களுக்கான 'பார்க்கிங்' பகுதியாக மாற்றிவிட்டனர்.
அணுகு சாலை பணி முழுமையடையாததால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பற்ற சூழலில் பயணிக்கும் நிலை தொடர்கிறது.
தவிர, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் விரைவாக செல்லவும் சிக்கல் எழுகிறது.
எனவே, விடுபட்டுள்ள இடங்களில் அணுகுசாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் பயமின்றி, பாதுகாப்பாக பயணிக்க முடியும். தவிர, 'ஆம்புலன்ஸ்'களும் குறுகிய நேரத்தில் செல்ல முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.