/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குழாயடி சண்டையாக மாறிய தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
/
குழாயடி சண்டையாக மாறிய தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
குழாயடி சண்டையாக மாறிய தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
குழாயடி சண்டையாக மாறிய தி.மு.க., - அ.தி.மு.க., மோதல்
ADDED : நவ 24, 2024 02:46 AM

திருக்கழுக்குன்றம் அருகே கிளாப்பாக்கம் மற்றும் பாண்டூர் ஊராட்சிகள் உள்ளன. கிளாப்பாக்கம் ஊராட்சி தலைவராக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராசுக்குட்டி உள்ளார்.
கிளாப்பாக்கம் குடிநீர் தேவைக்காக, அப்பகுதியை ஒட்டியுள்ள பாண்டூர் பாலாற்றில், ஆழ்துளை கிணறு அமைக்க, திருக்கழுக்குன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.
உள்ளாட்சி தேர்தலுக்குப் பின், பாண்டூரைச் சேர்ந்த தி.மு.க., கிளை செயலர் கிருஷ்ணசாமிக்கும், அ.தி.மு.க., ஊராட்சி தலைவர் ராசுக்குட்டிக்கும் இடையே அரசியல் பகை நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, பாண்டூர் ஆற்றில் கிணறு அமைக்கவிடாமல், தி.மு.க.,வினரும், கிருஷ்ணசாமியின் உறவினர்களும் தடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த நவ., 11ம் தேதி தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர், போலீசார் மேற்பார்வையில், கிணறு அமைக்க முயன்றும், 30க்கும் மேற்பட்ட பெண்களை திரட்டி வந்து தடுத்தனர். இதையடுத்து, கிளாப்பாக்கம் ஊராட்சி தலைவர் ராசுக்குட்டி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பின், நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நவ., 20ல் மீண்டும் கிணறு அமைக்க, அதிகாரிகள் முயன்றும் எதிர்தரப்பினர் தடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆற்றில் கிணறு அமைக்க, வட்டார வளர்ச்சி நிர்வாகத்தை வலியுறுத்தி, கிளாப்பாக்கத்தைச் சேர்ந்த பெண்கள், காலை 7:30 மணிக்கு செங்கல்பட்டில் இருந்து கிளாப்பாக்கம் வந்த அரசு பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். காலி குடங்களுடன் அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் திருக்கழுக்குன்றம் போலீசார், அங்கு வந்து பேச்சு நடத்தினர். பாண்டூரைச் சேர்ந்த தி.மு.க.,வினரின் துாண்டுதலால், கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் சரமாரியாக குற்றம் சாட்டினர். ஆற்றில் கிணறு அமைத்து குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.
காலை 10:00 மணியைக் கடந்தும், மறியல் தொடர்ந்த நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பேச்சு நடத்தினார். இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு அவமதிப்பு சிக்கல் ஏற்படும் என்பதை எதிர் தரப்பினரிடம் விளக்குவதாகவும், கிணற்றை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.
இதையேற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- நமது நிருபர் -