/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இறந்து கிடந்த முதியவரின் காலை கடித்து குதறிய நாய்
/
இறந்து கிடந்த முதியவரின் காலை கடித்து குதறிய நாய்
ADDED : ஜூலை 08, 2025 10:17 PM
பல்லாவரம்:ஜமீன்பல்லாவரத்தில், காலி மனையில் இறந்து கிடந்த முதியவரின் காலை, நாய் கடித்து குதறிய சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜமீன்பல்லாவரம், சுபம் நகரில், மூவரசம்பட்டு ஏரியை ஒட்டி, நேற்று காலை, அப்பகுதியை சேர்ந்தோர் நடைபயிற்சி சென்றனர்.
அப்போது, அங்குள்ள காலி இடத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் உடலின் காலை, நாய் ஒன்று கடித்து குதறிக்கொண்டிருந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நடைபயிற்சி சென்றோர், நாயை அங்கிருந்து விரட்டி விட்டு பார்த்த போது, முதியவரின் இடது கால் சதை முழுதையும் நாய் கடித்து குதறியதில், வெறும் எலும்பு மட்டுமே இருந்தது. இதையடுத்து, அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அப்பகுதி நலச்சங்க நிர்வாகி ஒருவர், இறந்த முதியவர், அப்பகுதியில் பாட்டில்களை பொறுக்கி பிழைப்பு நடத்தி வந்ததாக கூறினார். இது தொடர்பாக, பல்லாவரம் போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.