/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 200 ஏரிகளில் துார்வாரும் பணி...துவக்கம் : வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்க உத்தரவு
/
செங்கையில் 200 ஏரிகளில் துார்வாரும் பணி...துவக்கம் : வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்க உத்தரவு
செங்கையில் 200 ஏரிகளில் துார்வாரும் பணி...துவக்கம் : வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்க உத்தரவு
செங்கையில் 200 ஏரிகளில் துார்வாரும் பணி...துவக்கம் : வடகிழக்கு பருவமழைக்கு முன் முடிக்க உத்தரவு
UPDATED : மே 18, 2025 02:04 AM
ADDED : மே 17, 2025 08:53 PM

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 200 ஏரிகள் துார்வரும் பணி துவங்கி நடந்து வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில், 620 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் நீர் பாசனம் வாயிலாக, விவசாய நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்த ஏரிகள் பல ஆண்டுகளாக துார் வாரப்படமால் இருப்பதால், துார்வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாய நலன்காக்கும் கூட்டங்களில், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்பின், ஏரிகளை ஆய்வு செய்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூடுதல் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். ஏரிகளை துார்வாரி சீரமைக்க, ஊரக வளர்ச்சித்துறையினர் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறுபாசன ஏரிகள் துார் வரும், குடிமராமத்து திட்டத்தில், ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 200 சிறுபாசன ஏரிகள் துார்வாரி சீரமைக்க 16.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசு உத்தரவிட்டது.
இப்பணிகளை செயல்படுத்த, ஊரக வளர்ச்சித்துறைக்கு, அனுமதி வழங்கி, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பின், 200 ஏரிகளையும் துார்வாரி சீரமைக்க, கடந்த ஏப்., 16ம் தேதி டெண்டர் விடப்பட்டது. பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். அதன்பின், ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணைகளை, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா வழங்கினார்.
ஏரி பணி துவங்கும்போது, பெயர் பலகை மற்றும் திட்டத்தின் பெயர், பணியின் பெயர் எழுத வேண்டும். ஏரிக்கரைகளில் பனை மரங்கள் நடப்பட வேண்டும்.
வெளிப்புற கரை யை ஒட்டியுள்ள பகுதிகளில், நாட்டு இன மரங்கள் நடலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மாவட்டத்தில், திருப்போரூர் அடுத்த, தையூர் கிராமத்தில் ஏரி துார்வரும் பணியை, கலெக்டர் அருண்ராஜ், நேற்றுமுன்தினம் துவக்கி வைத்து, பருவ மழைக்கு முன் பணிகளை முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 200 ஏரிகள் துார்வரும் பணி துவங்கி நடைப்பெற்று வருகிறது.
பணிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கண்காணிக்க வேண்டும், வடகிழக்கு பருவ மழைக்கு முன் பணிகளை முடிக்க வேண்டும், என, ஊரக வளர்ச்சி துறை கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா தெரிவித்தார்.