/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாவட்டத்தில் 221 ஊராட்சிகளில் குடிநீர் பணி...விறுவிறு!:கோடை காலத்திற்குள் வினியோகிக்க உத்தரவு
/
மாவட்டத்தில் 221 ஊராட்சிகளில் குடிநீர் பணி...விறுவிறு!:கோடை காலத்திற்குள் வினியோகிக்க உத்தரவு
மாவட்டத்தில் 221 ஊராட்சிகளில் குடிநீர் பணி...விறுவிறு!:கோடை காலத்திற்குள் வினியோகிக்க உத்தரவு
மாவட்டத்தில் 221 ஊராட்சிகளில் குடிநீர் பணி...விறுவிறு!:கோடை காலத்திற்குள் வினியோகிக்க உத்தரவு
ADDED : மே 08, 2024 10:33 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 221 ஊராட்சிகளில், 306 குடிநீர் பணிகள் செய்ய, 11.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. கோடை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, குடிநீர் வினியோகத்தை துவக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், கூடுதல் குடிநீர் வழங்கவும், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கவும், கிணறு, ஆழ்துளை கிணறுகள் அமைக்க வேண்டும்.
சேதமடைந்த பழைய குழாய்களை மாற்றி, புதிய இணைப்புகள் ஏற்படுத்தவேண்டும் என, கலெக்டர் மற்றும் அரசிடம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதன்பின், ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் ஆய்வு செய்து, 221 ஊராட்சிகளில் கூடுதல் குடிநீர் தேவை என, கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதைத் தொடர்ந்து, குடிநீர் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய, அரசுக்கு, கலெக்டர் கருத்துரு அனுப்பி வைத்தார்.
அதன்படி, மாவட்டத்தில், 221 ஊராட்சிகளில், புதிய கிணறு, ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட 306 பணிகள் செய்ய, 2023 - 24ம் ஆண்டுக்கான 15வது நிதிக்குழு மானிய நிதியில், 11 கோடியே 28 லட்சத்து 19 ஆயிரத்து 371 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த ஆண்டு, நவ., மாதம் அரசு உத்தரவிட்டது.
இப்பணிகள் செய்ய, கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கினார். அதன்பின், குடிநீர் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை, கோடை காலத்திற்குள் விரைந்து முடித்து, குடிநீர் வினியோகத்தை துவக்க வேண்டுமென, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 221 ஊராட்சிகளில், கிணறு, ஆழ்துளை கிணறு, குழாய் இணைப்புகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் குடிநீர் வினியோகத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள்,
செங்கல்பட்டு மாவட்டம்.