/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசினர் சிறப்பு இல்லத்தில் போதை மீட்பு மையம்...புது முயற்சி :
/
அரசினர் சிறப்பு இல்லத்தில் போதை மீட்பு மையம்...புது முயற்சி :
அரசினர் சிறப்பு இல்லத்தில் போதை மீட்பு மையம்...புது முயற்சி :
அரசினர் சிறப்பு இல்லத்தில் போதை மீட்பு மையம்...புது முயற்சி :
UPDATED : ஜூலை 31, 2025 06:25 AM
ADDED : ஜூலை 30, 2025 11:08 PM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில், மாநிலத்திலேயே முதல் முறையாக, போதை மீட்பு மையம் மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. 'இப்பணிகள் அனைத்தும், எட்டு மாதங்களில் முடிக்கப்படும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு கொளவாய் ஏரிக்கு அருகில், அரசினர் சிறப்பு இல்லம் அமைந்துள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு போலீசாரிடம் சிக்கும் சிறார்கள், இந்த சிறப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்படுவர்.
தாம்பரம் கன்னடபாளையம் குப்பைமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை, தாம்பரம் ரயில்வே தண்டவாளம் பகுதியில் பேட்டரிகள் திருடிய வழக்கில், 2022ம் ஆண்டு போலீசார் கைது செய்து, இந்த அரசினர் சிறப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
வழக்குப்பதிவு
அதன் பின், அதே ஆண்டு டிச., 31ம் தேதி, சிறப்பு இல்லத்தில் ஊழியர்களால் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக, செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறப்பு இல்லத்தில் மாவட்ட கலெக்டர், சமூக நலத்துறை மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில், சிறுவன் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக கூறப்பட்ட நிலையில், செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில், போதை மீட்பு மையம் மற்றும் கூடுதல் கட்டட வசதிகள் செய்து தர வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சிறப்பு இல்லத்தில் கண்காணிப்பாளர் அலுவலகம், உதவி கண்காணிப்பாளர் குடியிருப்புகள், கூடுதல் தங்குமிடம், போதை மீட்பு மைய கட்டடம் உள்ளிட்டவை கட்ட, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை நிர்வாக அனுமதி வழங்கி, 5.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கட்டுமானப் பணிகளுக்கு, பொதுப்பணித்துறை மூலமாக, 'டெண்டர்' விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன், கட்டுமானப் பணிகள் துவங்கின.
இதில், கூடுதல் தங்குமிடம் கட்டடம், 9,186 சதுர அடியில் தங்கும் அறை, கண்காணிப்பாளர் அறை, வைப்பறை மற்றும் முதலுதவி அறையுடன் அமைகிறது.
2,108 சதுர அடி
போதை மீட்பு மைய கட்டடம், 2,571 சதுர அடியில், 12 படுக்கைகள் கொண்ட பொது வார்டு, தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு வார்டு, செவிலியர், மருத்துவர் அறைகள் மற்றும் கழிப்பறையுடன் அமைகிறது.
கண்காணிப்பாளர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் குடியிருப்பு கட்டடங்கள், 2,108 சதுர அடியில், தரை தளம் மற்றும் மேல் தளத்துடன் கட்டடப்படுகின்றன.
இதில் வசிப்பறை, உணவு அருந்தும் அறை, இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, கழிப்பறைகள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன.
'இப்பணிகள் அனைத்தும், எட்டு மாதங்களில் முடிக்கப்படும்' என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
எட்டு மாதங்களில் முடியும்
அரசினர் சிறப்பு இல்லத்தில், போதை மீட்பு மையம், கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர் ஆகியோருக்கு குடியிருப்புகள் மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. 5.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில், இப்பணிகளை எட்டு மாதத்திற்குள் முடித்து, கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். -பொதுப்பணித்துறை அதிகாரிகள், செங்கல்பட்டு.