/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவிலில் சாலைகள் ஆக்கிரமிப்பால்... திண்டாட்டம்மாவட்ட நிர்வாகம் சாட்டையை சுழற்ற எதிர்பார்ப்பு
/
சிங்கபெருமாள் கோவிலில் சாலைகள் ஆக்கிரமிப்பால்... திண்டாட்டம்மாவட்ட நிர்வாகம் சாட்டையை சுழற்ற எதிர்பார்ப்பு
சிங்கபெருமாள் கோவிலில் சாலைகள் ஆக்கிரமிப்பால்... திண்டாட்டம்மாவட்ட நிர்வாகம் சாட்டையை சுழற்ற எதிர்பார்ப்பு
சிங்கபெருமாள் கோவிலில் சாலைகள் ஆக்கிரமிப்பால்... திண்டாட்டம்மாவட்ட நிர்வாகம் சாட்டையை சுழற்ற எதிர்பார்ப்பு
ADDED : செப் 15, 2025 11:58 PM

சிங்கபெருமாள் கோவில்;சிங்கபெருமாள் கோவிலில் உள்ள சாலைகளை, கடைகள் மற்றும் வாகனங்கள் ஆக்கிரமிப்பதால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
செங்கல்பட்டு புறநகர் பகுதியில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி, அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிங்கபெருமாள் கோவிலில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
சுற்றியுள்ள திருக்கச்சூர், கொளத்துார், ஆப்பூர், செட்டிபுண்ணியம் உள்ளிட்ட, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கல்வி, மருத்துவம், வங்கி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சிங்கபெருமாள் கோவில் வந்து செல்கின்றனர். மேலும், அனுமந்தபுரம் சாலையில் உள்ள பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கும், சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள ஜி.எஸ்.டி., சாலையில், மெல்ரோசாபுரம் முதல்- பகத்சிங் நகர் வரை 3 கி.மீ., துாரத்திற்கு, சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கார், ஆட்டோ, தனியார் தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இரவில் இச்சாலையை, தனியார் நிறுவன பேருந்துகள் இலவச, 'பார்க்கிங்' பகுதியாகவே பயன்படுத்தி வருகின்றன.
இதேபோல, அனுமந்தபுரம் சாலையில் இருந்து செங்குன்றம் சந்திப்பு வரை, சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இந்த பகுதிகளில் உள்ள கடைகளின் விளம்பர பதாகைகளும் சாலையில் வைக்கப்படுவதால், சாலை குறுகலாகி, காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, தனியார் தொழிற்சாலைகளின் பேருந்துகள் நெடுஞ்சாலை, 'சிக்னல்' சந்திப்புகளில் நின்று, தொழிலாளர்களை ஏற்றிச் செல்வதால், மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இங்குள்ள தொழிற்சாலைகளில் பணிக்கு செல்வோர், தங்களின் இருசக்கர வாகனங்களை, சாலையோரம் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தாலும் பிரச்னை தொடர்கிறது.
கடந்தாண்டு, மாவட்ட நிர்வாக உத்தரவின்படி, போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இணைந்து, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றினர். ஆனாலும், சில வாரங்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து முடங்குவதால், தற்போது, அனுமந்தபுரம் சாலை சந்திப்பு, திருத்தேரி சந்திப்புகளில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த வழியாக பணிக்குச் செல்வோர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி, இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில், மூன்று ஆண்டுகளாக, அணுகுசாலை தனியாக பிரிக்கப்படாமல் உள்ளது. இதனால், சாலை அகலமாக உள்ளதால், வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அணுகுசாலை இல்லாததால், விபத்துகளும் நிகழ்கின்றன. நெரிசல் காரணமாக, ஆம்புலன்ஸ் போன்ற அவசர கால வாகனங்கள் கூட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அனுமந்தபுரம் சாலையில், நடந்து செல்லவே முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்புகளால் நெரிசல் ஏற்படுகிறது. - எஸ்.பசுபதி, சிங்கபெருமாள் கோவில்.
சிங்கபெருமாள் கோவில் பகுதியை பொறுத்தவரை, அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவோர், தங்களுக்கு தெரிந்த கடைகளுக்கு முன் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு பணிக்குச் செல்கின்றனர். இந்த வாகனங்களே, மாலை நேர போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம். தனியார் இடங்கள் மற்றும் ரயில் நிலையத்தில், 'பார்க்கிங்' இருந்தும், கட்டணத்தை சேமிக்கும் எண்ணத்தில், இதுபோல வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்துகின்றனர். இனி வரும் காலங்களில், இதுபோன்று நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. - போக்குவரத்து போலீசார், மறைமலை நகர்.