/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மின்விளக்குகள் 'அவுட்' ... அலட்சியம்!அணுகுசாலை ஆக்கிரமிப்புகளையும் கண்டு கொள்ளாத ஆணையம்
/
தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மின்விளக்குகள் 'அவுட்' ... அலட்சியம்!அணுகுசாலை ஆக்கிரமிப்புகளையும் கண்டு கொள்ளாத ஆணையம்
தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மின்விளக்குகள் 'அவுட்' ... அலட்சியம்!அணுகுசாலை ஆக்கிரமிப்புகளையும் கண்டு கொள்ளாத ஆணையம்
தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மின்விளக்குகள் 'அவுட்' ... அலட்சியம்!அணுகுசாலை ஆக்கிரமிப்புகளையும் கண்டு கொள்ளாத ஆணையம்
UPDATED : செப் 26, 2025 08:33 PM
ADDED : செப் 26, 2025 08:31 PM

செங்கல்பட்டு:சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வண்டலுார் முதல் தொழுப்பேடு வரை மேம்பாலங்கள் மற்றும் சாலைகள் குறுக்கிடும் பெரும்பாலான பகுதிகளில், உயர்கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து உள்ளன. அத்துடன், அணுகு சாலைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களாலும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதால், இப்பிரச்னைகளுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது.
![]() |
சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வண்டலுார், பரனுார், செங்கல்பட்டு புறவழிச்சாலை, இருங்குன்றப்பள்ளி, மதுராந்தகம், சோத்துப்பாக்கம், அச்சிறுபாக்கம், தொழுப்பேடு போன்ற இடங்களில் மேம்பாலங்கள் உள்ளன. இந்த மேம்பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்குகள், பல இடங்களில் முறையான பராமரிப்பின்றி, எரியாமல் உள்ளன.
மேலும், செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்றில் மேம்பாலங்கள் உள்ளன.
பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, புக்கத்துறை, படாளம் கூட்டுச்சாலை, மேலவலம்பேட்டை, கருங்குழி ஆகிய இடங்களில், சாலை குறுக்கிடும் பகுதிகளிலும் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றிலும் பல விளக்குகள் எரியாமல் உள்ளன. இவற்றை, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பராமரிக்க வேண்டிய நிலையில் மெத்தனமாக உள்ளது.
சாலை பராமரிப்பிற்காக, செங்கல்பட்டு அடுத்த பரனுார், அச்சிறுபாக்கம் அடுத்த ஆத்துார் போன்ற இடங்களில் சுங்கச்சாவடி அமைத்து, வாகன ஓட்டிகளிடம் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருந்தும், உயர்கோபுர மின் விளக்குகளை பராமரிப்பதில்லை.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
ஆனால், சாலைகள் மற்றும் பாலங்களில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள் எரியாமல் உள்ளதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பாலங்களில் மின் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.
மேலும், வாகன ஓட்டிகள் தனியாக செல்லும் போது, மர்ம நபர்கள் வழிமறித்து மொபைல்போன், மடிக்கணினி, பணம், நகை போன்றவற்றை பறித்துச் செல்கின்றனர்.
மின் விளக்குகள் எரியாததால் கடந்த இரண்டு ஆண்டுகளில், சாலை விபத்தில், 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதைத் தவிர்க்க, உயர்கோபுர மின் விளக்குகள் மற்றும் சாலையோரம் உள்ள மின் விளக்குகளை எரிய வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, வண்டலுார் முதல் செங்கல்பட்டு பரனுார் வரை, ஆறு வழியாக இருந்த சாலை, எட்டு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், அணுகுசாலை தனியாக அமைக்கப்படவில்லை.
இதனால், அணுகுசாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள், இலவச 'பார்க்கிங்' பகுதியாக பயன்படுத்தி வருகின்றன. இதன் காரணமாக, பழுதாகும் வாகனங்களை அணுகுசாலையில் நிறுத்தி பழுது நீக்க முடியாமல், பிரதான சாலையிலேயே நிறுத்துவதால், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், வண்டலுார் முதல் தொழுப்பேடு வரை உள்ள மேம்பாலங்கள், சாலைகள் குறுக்கிடும் பகுதிகளில், எரியாமல் உள்ள உயர்கோபுர மின்விளக்குகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சீரமைக்க வேண்டும்.
மேலும், அணுகுசாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.