/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பத்தில் மின்கட்டண வசூல் மையம் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறாமல் தவிப்பு
/
நெல்லிக்குப்பத்தில் மின்கட்டண வசூல் மையம் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறாமல் தவிப்பு
நெல்லிக்குப்பத்தில் மின்கட்டண வசூல் மையம் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறாமல் தவிப்பு
நெல்லிக்குப்பத்தில் மின்கட்டண வசூல் மையம் 10 ஆண்டு கோரிக்கை நிறைவேறாமல் தவிப்பு
ADDED : ஏப் 01, 2025 06:52 PM
திருப்போரூர்:நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மின் கட்டணம் வசூல் மையம் அமைக்க வேண்டும் என, கடந்த 10 ஆண்டுகளாக பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கை இன்னும் நிறைவேறாததால், அதிருப்தியில் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் மருத்துவ கல்லுாரியுடன் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், வங்கிகள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்க், கோவில்கள் உள்ளன.
அம்மாப்பேட்டை கிராமத்தில் 110 கிலோ வாட் திறன்கொண்ட மின் வழங்கல் நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த மின் நிலையத்தில் இருந்து கொண்டங்கி, கீழூர் என, சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மின் விநியோகம் செய்யப்படுகிறது. இப்பணியில் மின் பராமரிப்பு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், இந்த நெல்லிக்குப்பம் மின் நிலையத்திற்கு, மின் கட்டணம் வசூல் மையம் உருவாக்கப்படவில்லை.
இதன் காரணமாக நெல்லிக்குப்பம் மின் நிலையத்தில் மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு பெறும் விண்ணப்பங்களை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பொதுமக்கள் புதிய மின் இணைப்பு கோரியும், மின் கட்டணம் செலுத்தவும், 10 முதல் 15 கி.மீ., துாரத்தில் உள்ள திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு நேர விரயமும், பண விரயமும், வீண் அலைச்சலும் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
எனவே, நெல்லிக்குப்பம் மின் வழங்கல் நிலையத்தில் புதிய இளநிலை பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்றும், மின் கட்டணம் செலுத்தும் மையம் ஏற்படுத்த வேண்டுமென்றும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைத்தீர்வு கூட்டம், விவசாய சங்க கூட்டங்களில், நெல்லிக்குப்பத்தில் மின்கட்டணம் வசூல் மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பத்தில், மின் இணைப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இங்கு மின் கட்டணம் மையம் இல்லாததால், 15 கி.மீ., துாரம் உள்ள திருப்போரூர் அலுவலகத்திற்கு சென்று வரவேண்டியுள்ளது. இதுதொடர்பாக 10 ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. எனவே, விரைவில் மின்கட்டணம் வசூல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கெஜராஜன்,
விவசாய சங்க கூட்டமைப்பு துணை தலைவர்,
செங்கல்பட்டு மாவட்டம்.

