/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நாவலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி
/
நாவலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி
நாவலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி
நாவலுாரில் ஆக்கிரமிப்பு அகற்றம்: ஒருவர் தீக்குளிக்க முயற்சி
ADDED : செப் 25, 2024 06:25 AM

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில், சென்னை மாநகராட்சியை ஒட்டிய பகுதிகளாக, நாவலுார், தாழம்பூர் ஊராட்சிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில், தற்போது அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகள் பெருகி வருகின்றன.
செங்கல்பட்டு நெடுஞ்சாலை கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள பழைய மாமல்லபுரம் சாலை, நாவலுார் - தாழம்பூர் செல்லும் சாலைகளில், நுாற்றுக்கணக்கான தண்ணீர் லாரிகளும், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களும் சென்று வருகின்றன.
சில மாதங்களுக்கு முன், சேதமடைந்திருந்த நாவலுார்- - தாழம்பூர் சாலையை சீரமைத்து, வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், அச்சாலையில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், இச்சாலையின் நாவலுார் எல்லை முடிவு பகுதியில், குடியிருப்புகள், வணிக கடைகள் உள்ளன. அவை, இந்த சாலையில் 200 மீட்டர் துாரம் வரை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டு உள்ளன.
எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது. இதற்காக, ஆக்கிரமிப்பை அகற்றுமாறு எச்சரித்து, முதற்கட்டமாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
ஆனால், யாரும் ஆக்கிரமிப்பை அகற்றாததால், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் சண்முகபிரியன், வருவாய்த் துறையினர், தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் முன்னிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், நேற்று காலை 11:00 மணிக்கு, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஆக்கிரமிப்பு வீடு, கடைகளை அகற்றும் பணி நடந்தது.
இதற்கு, நாவலுார் ஊராட்சி தி.மு.க., நிர்வாகி ராஜாராம், புதிய புரட்சி கழகம் கட்சியின் மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், செயலர் செல்வம், துரைசாமி, குடியிருப்புவாசிகள், கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, சீனிவாசன் என்ற குடியிருப்புவாசி, திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். உடனே, அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
இன்ஸ்பெக்டர் சார்லஸ், தற்கொலைக்கு முயன்றவர் உட்பட சில குடியிருப்புவாசிகளிடம், மாற்று இடம் ஏற்பாடு செய்வது குறித்து அமைச்சர், அதிகாரிகளிடம் பேசி பரிந்துரைக்கப்படும் என கூறியதையடுத்து, எதிர்ப்பு தெரிவித்தவர்கள் சமாதானம் அடைந்தனர்.
தொடர்ந்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், நெடுஞ்சாலைத் துறையினர் ஈடுபட்டனர்.