/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம்...அட்டூழியம்! : பருவமழைக்கு முன் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
/
செங்கையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம்...அட்டூழியம்! : பருவமழைக்கு முன் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
செங்கையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம்...அட்டூழியம்! : பருவமழைக்கு முன் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
செங்கையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம்...அட்டூழியம்! : பருவமழைக்கு முன் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவு
UPDATED : ஆக 09, 2024 01:40 AM
ADDED : ஆக 09, 2024 01:26 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஏரி மதகுகளை மழைக்காலத்திற்குள் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 528 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 620 தாங்கல் ஏரிகளும் உள்ளன. மாவட்டம் முழுதும், 2,752 குளம், குட்டைகள் மற்றும் பாலாறு ஆகியவை உள்ளன.
பாலாற்றில் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். மற்ற மாதங்களில், தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும். ஏரிகளுக்கான நீர்வரத்து கால்வாய்கள் துார்ந்தும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும் உள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன், குடிமராமத்து திட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,000ரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளம் குட்டைகளும் துார் வாரப்பட்டன. ஆனால், பணிகளில் தரம் இல்லாததால், மழைக்காலங்களில் ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டது.
நீர்ப்பிடிப்பு பகுதி
அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன.
ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்வோர், ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் தேங்காத வகையில், ஏரிக்கரையை உடைத்து விடுகின்றனர். பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு செல்லும் வரத்துக் கால்வாயும் துார் வாரப்படாமல் பரமாரிப்பின்றி சீரழிந்து வருகிறது.
திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், ஆயப்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள விவசாயிகள், மழைக்காலங்களில் ஏரிக்கரையை உடைத்து விடுகின்றனர். திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் தாலுாகாகளில் உள்ள ஏரிகளில், மதகு உடைப்பு, துார்வாரி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
திப்போரூர் அடுத்த கொண்டங்கி ஏரியிலிருந்து, கொண்டங்கி, மேலையூர், கொட்டமேடு கால்வாய், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில், பாசன கால்வாய்கள் உள்ளன.
இதில், நெல்லிக்குப்பம் கால்வாயில், 5.5 கி.மீ., துார் வாரி சீரமைத்தனர். மற்ற கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி துார் வார வேண்டும். பாலாற்றில் உள்ள முட்செடிகளை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும். கூடுவாஞ்சேரி, காயரம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள பாசன கால்வாயையும் துார் வாரி சீரமைக்க வேண்டும்.
பாசன கால்வாய்
இந்த ஆண்டு, வழக்கத்தை விட அதிக அளவில் மழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பாசன கால்வாய்கள் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைக்காலத்தில். நெற்பயிர்கள் மூழ்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். செங்கல்பட்டு, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிகளில், மழைநீர் கால்வாய்களை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, அனைத்து துறை அதிகாரிகள் கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஏரி மதகுகள் உடைப்பு, சீரமைப்பு பணிகளுக்கு நிதி கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நீர்வளம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. தாம்பரம் பகுதியில் மழைநீர் கால்வாய்களை துார் வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
- ச.அருண்ராஜ்,
கலெக்டர், செங்கல்பட்டு.