/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு மதுராந்தகத்தில் அதிரடியாக அகற்றம்
/
சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு மதுராந்தகத்தில் அதிரடியாக அகற்றம்
சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு மதுராந்தகத்தில் அதிரடியாக அகற்றம்
சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு மதுராந்தகத்தில் அதிரடியாக அகற்றம்
ADDED : மே 16, 2025 02:39 AM

மதுராந்தகம்,
மதுராந்தகத்தில், சார் - பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலையில், இருபுறமும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்து அப்புறப்படுத்தி, மதுராந்தகம் நகராட்சி அதிகாரிகள் இடத்தை மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட பழைய தாலுகா அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை, 40 அடி அகலத்தில் இருந்தது.
நாளடைவில் அப்பகுதியில் வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் சிறிய கடைகள் அமைத்து, சாலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
பழைய தாலுகா அலுவலகம் இடித்து அகற்றப்பட்டு, அந்த இடத்தில், 15வது நிதி குழு மானியம் சுகாதார திட்டத்தின் கீழ், 420 சதுர மீட்டர் பரப்பளவில், 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.
மருத்துவமனைக்கு செல்லும் 40 அடி சாலையை, வழக்கறிஞர்கள் உட்பட தனி நபர்கள் கடைகள், அலுவலகம் அமைத்தும், கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.
அதனால், மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்றுவர போதிய இடவசதி இன்றி இருந்தது.
இதை அகற்ற, நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு முறையாக 'நோட்டீஸ்' வழங்கி உள்ளது.
நோட்டீஸ் வழங்கி பல நாட்கள் ஆகியும் அகற்றாததால், நகராட்சி ஆணையர் அபர்ணா மற்றும் நகராட்சி வடிவமைப்பு ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் பரந்தாமன் தலைமையில் நேற்று, 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
அதில், 16 கடைகள், 186 சதுர மீட்டர் பரப்பளவு, சாலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அதிகாரிகள் அகற்றினர்.
25 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடத்தை, அதிகாரிகள் மீட்டனர்.
ஆக்கிரமிப்புகள் முழுதாக அகற்றப்பட்ட பின், மருத்துவமனைக்குச் செல்ல புதிதாக சாலை அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.