/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சொத்து குவித்த பொறியாளர், குடும்பத்திற்கு சிறை தண்டனை
/
சொத்து குவித்த பொறியாளர், குடும்பத்திற்கு சிறை தண்டனை
சொத்து குவித்த பொறியாளர், குடும்பத்திற்கு சிறை தண்டனை
சொத்து குவித்த பொறியாளர், குடும்பத்திற்கு சிறை தண்டனை
ADDED : டிச 24, 2024 11:12 PM
செங்கல்பட்டு:அரசு பணியில் இருந்தபோது அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுப்புற சூழல் பொறியாளர், அவரது மனைவி, தந்தை, தாய் ஆகியோருக்கு, செங்கல்பட்டு நீதிமன்றம், நேற்று தண்டனை வழங்கியது.
சென்னை அம்பத்துார் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில், சுற்றுப்புற சூழல் பொறியாளராக உமயகுஞ்சரம், 61, என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், 2002ம் ஆண்டு ஏப்., 1ம் தேதி முதல், 2008 செப்., 10ம் தேதி வரையிலான காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தார்.
இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், சுற்றுப்புற சூழல் பொறியாளர் உமயகுஞ்சரம் மீது வழக்கு பதிவு செய்தும், இவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி மாலதி, 57, தந்தை ராமலிங்கம், 87, தாய் அரிவானந்தகோமதி, 85, ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
அதன் பின், சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இருந்த வழக்கு, செங்கல்பட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இவ்வழக்கு, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கவிதா ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், பொறியாளர் உமயகுஞ்சரம், அவரது மனைவி மாலதி ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 அபராதமும், அவரது தந்தை ராமலிங்கம், தாய் அரிவானந்தகோமதி ஆகியோருக்கு, தலா ஓராண்டு சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ, நேற்று தீர்ப்பளித்தார்.