/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரிக்கந்தாங்கல் அரசு ஆரம்ப பள்ளியை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
/
கரிக்கந்தாங்கல் அரசு ஆரம்ப பள்ளியை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
கரிக்கந்தாங்கல் அரசு ஆரம்ப பள்ளியை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
கரிக்கந்தாங்கல் அரசு ஆரம்ப பள்ளியை மீண்டும் செயல்படுத்த எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 10, 2025 02:10 AM

சித்தாமூர்:கரிக்கந்தாங்கல் கிராமத்தில், கடந்தாண்டு மூடப்பட்ட ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்ப பள்ளியை, மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சித்தாமூர் அடுத்த முகுந்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கரிக்கந்தாங்கல் கிராமத்தில், 1974ம் ஆண்டில் ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்ப பள்ளி துவக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
கரிக்கந்தாங்கல், முகுந்தகிரி, புத்துார் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இந்த பள்ளியில் பயின்று, பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர்.
நாளடைவில் பொதுமக்களுக்கு அரசு பள்ளி மீது நாட்டம் குறைந்து, தனியார் பள்ளிகளுக்கு படையெடுத்ததால், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து, 2023 - 24ம் கல்வியாண்டில், இந்த பள்ளியில் நான்கு மாணவர்கள் மட்டுமே படித்தனர்.
முன்னாள் மாணவ - மாணவியர் பள்ளியின் 50ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாட தயாராகி வந்த நிலையில், 2024 - 25ம் கல்வியாண்டில் பள்ளியில் படித்து வந்த நான்கு மாணவர்களையும், அவர்களின் பெற்றோர் தனியார் பள்ளியில் சேர்த்தனர். இதனால், போதிய மாணவர்கள் இல்லாமல், கடந்த ஆண்டு இப்பள்ளி மூடப்பட்டது.
தற்போது, கரிக்கந்தாங்கல் கிராமத்தில் இருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 36 மாணவ - மாணவியர் சித்தாமூர், நீர்பெயர், பூரியம்பாக்கம் போன்ற பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
குழந்தைகளின் பெற்றோரிடம் கலந்தாய்வு செய்து, குழந்தைகளை மீண்டும் அரசு பள்ளியில் சேர்த்து, கரிக்கந்தாங்கல் ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்ப பள்ளியை மீண்டும் செயல்படுத்த, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

