/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
/
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 29, 2025 11:59 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு கருதி, புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற வருகின்றனர்.
இங்கு, புறநோயாளிகளாக தினமும் 3,000க்கு மேற்பட்டவர்களும், உள்நோயாளிகளாக 1,700க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை பார்ப்பதற்கு உறவினர்கள், இருசக்கர வாகனங்களில் மருத்துவமனைக்கு வருகின்றனர்.
ஒரு சிலர் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். இவர்களது வாகனங்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. இதனால், 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, மருத்துவமனை வளாகத்தில் பின்புறம் பகுதியில் இருசக்கர வாகனம், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்த இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த, மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக மருத்துவர்கள், ஊழியர்கள் மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டுச் செல்கின்றனர். அத்துடன், சிகிச்சையின் போது சிலர், மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முற்படுகின்றனர். மருத்துவமனை வளாகத்தில், திருட்டு சம்பவமும் அதிகமாக நடக்கிறது.
இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் தனியாக அமைக்க வேண்டும் என, எஸ்.பி., மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம், மருத்துவமனை முதல்வர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் நலன் கருதி, மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் உடனடியாக அமைக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.