sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஏரிகளில் கழிவுநீர் வெளியேற்றி தொழிற்சாலைகள்... அடாவடி நிலத்தடி நீர் மாசடைவதோடு, செடிகள் கருகி பாதிப்பு

/

ஏரிகளில் கழிவுநீர் வெளியேற்றி தொழிற்சாலைகள்... அடாவடி நிலத்தடி நீர் மாசடைவதோடு, செடிகள் கருகி பாதிப்பு

ஏரிகளில் கழிவுநீர் வெளியேற்றி தொழிற்சாலைகள்... அடாவடி நிலத்தடி நீர் மாசடைவதோடு, செடிகள் கருகி பாதிப்பு

ஏரிகளில் கழிவுநீர் வெளியேற்றி தொழிற்சாலைகள்... அடாவடி நிலத்தடி நீர் மாசடைவதோடு, செடிகள் கருகி பாதிப்பு


ADDED : மே 12, 2025 11:09 PM

Google News

ADDED : மே 12, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார், :காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிப்பின்றி வெளியேற்றப்படும் கழிவுநீர், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீரின் மாதிரியை சேகரித்து, எடுத்துச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் குன்றத்துார் தாலுகாக்களில் இருங்காட்டுகோட்டை, பிள்ளைபாக்கம், ஸ்ரீபெரும்புதுார், வல்லம் - வடகால், ஒரகடம் ஆகிய ஐந்து இடங்களில் 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உள்ளன.

இங்கு, மோட்டார் வாகனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், டயர், கண்ணாடி, மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை தயாரிக்கும் 1,000க்கும் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளன.

ஆண்டுக்கு 70,000 கோடி ரூபாய் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தமிழகத்திலேயே, அரசுக்கு அதிகம் வருமானம் ஈட்டும் மாவட்டமாக காஞ்சிபுரம் விளங்கும் நிலையில், பொருட்களை உற்பத்தி செய்ய முக்கிய தேவையான தண்ணீரை பாதுகாப்பதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

இம்மாவட்ட தொழிற்சாலைகளில் இருந்து சுத்திகரிக்காமல் வெளியேற்றும் கழிவுநீர் மற்றும் ரசாயன கழிவு, ஏரி மற்றும் நீர்நிலைகளில் கலந்து தண்ணீர் மாசடைகிறது. இதனால், நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது.

மாத்துார், வெங்காடு, ஸ்ரீபெரும்புதுார், போந்துார், மாம்பாக்கம், வைப்பூர், பிள்ளைப்பாக்கம், வடக்குப்பட்டு உள்ளிட்ட ஏரிகள், அப்பகுதியில் இருந்து வெளியேறும் தொழிற்சாலை கழிவுநீரால், நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன.

குன்றத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வைப்பூர் சித்தேரியில், அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து கலக்கும் கழிவுநீரால், ஏரியில் உள்ள செடிகள் பசுமை இழந்து கருகி உள்ளன.

மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், கழிவுநீர் கலந்த ஏரி நீரை குடிப்பதால், நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

அதேபோல, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால், சிறுமாங்காடு, வெங்காடு, வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசடைவதோடு, கண்ணெரிச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புகளை, இப்பகுதிவாசிகள் சந்தித்து வருகின்றனர்.

தண்ணீர் மாசு


ஸ்ரீபெரும்புதுார் ஏரியில் இருந்து, செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் உபரி நீர் கால்வாயில், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால், சென்னையில் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து வருகிறது.

குறிப்பாக தனியார் விடுதி, கேன்டீன் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரி கால்வாயில் நேரடியாக கலக்க விடுகின்றன.

இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் குளிப்பவர்களுக்கு உடல் அரிப்பு ஏற்படுகிறது. ஏராளமான மீன் வகைகள் செத்து மிதக்கின்றன.

ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட மாவட்ட முழுதும் உள்ள தொழிற்சாலைகளால், நீர்நிலைகள் பாதிப்பு, காற்று மாசு உள்ளிட்ட பிரச்னை அதிகளவில் உள்ளது. இவற்றை தீர்க்க, மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், செம்பரம்பாக்கம், வைப்பூர், மாம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீரின் மாதிரியை சேகரித்து எடுத்து சென்றுள்ளனர்.

இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தொழிற்சாலைகளில் இருந்து ஏரிகளில் கழிவுநீர் கலக்க விடுவதாக புகார் வந்தது. அதுகுறித்து விசாரித்து வருகிறோம்.

முக்கிய ஏரிகளின், நீரின் மாதிரியை சேகரித்துள்ளோம். இதன் அறிக்கை முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏரிகளில் கழிவுநீர் கலப்பது உறுதி செய்யும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு 'நோட்டீஸ்' அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us