/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போலி மருத்துவர் பாலுாரில் கைது
/
போலி மருத்துவர் பாலுாரில் கைது
ADDED : டிச 29, 2024 01:54 AM
மறைமலை நகர், செங்கல்பட்டு அடுத்த பாலுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்த 11வயது சிறுவர் நேற்று காலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் சிறுவனின் பாட்டியிடம் சிறுவனுக்கு சளி பிடித்து உள்ளது என கூறியதையடுத்து, பாட்டி அவரை மருத்துவர் என, நம்பி சிகிச்சை அளிக்க கூறி உள்ளார்.
அந்த நபர் சிறுவனுக்கு ஊசி வாயிலாக மருந்து செலுத்தி உள்ளார். இதை கண்ட அப்பகுதி இளைஞர்கள் அந்த நபர் மீது சந்தேகமடைந்து காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பாலுார் போலீசார் சிறுவனை ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் காஞ்சிபுரம் அடுத்த மின் நகர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த பைரோஸ் கான், 65.என்பதும், போலி மருத்துவரான இவர் இருசக்கர வாகனத்தில் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளித்து வந்ததும் தெரிந்தது.
மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் மலர்விழி அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பைரோஸ் கானை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.