/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
3 நாட்களாக கொள்முதல் பணி தாமதம் நெல் தேக்கத்தால் விவசாயிகள் கவலை
/
3 நாட்களாக கொள்முதல் பணி தாமதம் நெல் தேக்கத்தால் விவசாயிகள் கவலை
3 நாட்களாக கொள்முதல் பணி தாமதம் நெல் தேக்கத்தால் விவசாயிகள் கவலை
3 நாட்களாக கொள்முதல் பணி தாமதம் நெல் தேக்கத்தால் விவசாயிகள் கவலை
ADDED : செப் 21, 2024 01:49 AM

திருப்போரூர்:சிறுங்குன்றம் கிராமத்தில், தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மூன்று நாட்களாக நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், நெல் தேக்கமடைந்துள்ளது.
திருப்போரூர் ஒன்றியம், சிறுங்குன்றம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில், நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
சிறுங்குன்றம் கிராமத்தில், கடந்த 9ம் தேதி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து வேகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக கூலியாட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால், நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்யும் பணி தாமதமாக நடப்பதாக கூறப்படுகிறது.
இதனால், 15,000 நெல் மூட்டைகள் கொண்ட நெல் குவியல் குவிக்கப்பட்டு, நாளுக்கு நாள் தேக்கமடைந்து வருகிறது. இது தொடர்பாக, விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் ஊழியர்களிடம் கேட்டதற்கு, சரியான காரணம் தெரிவிக்கவில்லை.
எனினும், 60க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, மேற்கண்ட சிறுங்குன்றம் நெல் கொள்முதல் நிலையத்தில் குவித்து வைத்து, தார்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
அங்கு இரவு, பகல் பாராமல், விவசாயிகள் காத்துக்கிடக்கின்றனர். மேலும், மழை வந்தால் பெரிய பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்துடன் இருக்கின்றனர்.
இதில், சில விவசாயிகள், வேறு வழியின்றி மாற்று இடத்திற்கு கொண்டு சென்று சிரமப்படுகின்றனர். மற்ற விவசாயிகள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
எனவே, சிறுங்குன்றம் நெல் கொள்முதல் நிலையத்தில், விரைவில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.