/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் மனு
/
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் மனு
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் மனு
பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ADDED : செப் 24, 2024 03:50 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, கலால் உதவி ஆணையர் ராஜன்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், தொழில் கடன், இலவச வீட்டுமனை பட்டா, மின் இணைப்பு, சாலை வசதி உள்ளிட்ட 381 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பின், மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில், திருமண உதவித்தொகையாக, ஆறு பயனாளிகளுக்கு தலா 25,000 ரூபாயும், தாலிக்கு எட்டு கிராம் தங்க நாணயமும் வழங்கினார்.
கல்வி உதவித்தொகையாக, மூன்று பயனாளிகளுக்கு தலா 2,000 ரூபாயும், முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில், திருமண உதவித்தொகையாக, இரண்டு பயனாளிகளுக்கு தலா 25,-000 ரூபாயும் வழங்கப்பட்டது. சிறார் கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக, ஐந்து பேருக்கு, 80,000 ரூபாய் வழங்கப்பட்டது.
அப்போது, வண்டலுார் கிராம சிறு விவசாயிகள் நல சங்கத்தினர், கலெக்டரிடம் அளித்த மனு வருமாறு:
வண்டலுாரில், 16 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி, தனியார் ரியல் ஸ்டேட் நிறுவனத்தினர், பாசன கால்வாயை ஆக்கிரமித்து, வீட்டுமனை அமைத்துள்ளனர்.
இதனால், 50 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாசன வசதி தடைபட்டுள்ளது. பாசன கால்வாயை மீட்டு தரவும், ஏரி மதகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிற்றேரி மற்றும் பெரிய ஏரிகளில், கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீது விசாரணை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.