/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 485 ஏரியில் இலவசமாக மண் எடுக்க அனுமதி
/
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 485 ஏரியில் இலவசமாக மண் எடுக்க அனுமதி
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 485 ஏரியில் இலவசமாக மண் எடுக்க அனுமதி
விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 485 ஏரியில் இலவசமாக மண் எடுக்க அனுமதி
ADDED : ஏப் 03, 2025 02:14 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 485 ஏரிகளில் வண்டல் மண், களிமண் இலவசமாக எடுத்துக் கொள்ள விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மண் எடுக்க, தாசில்தாரிடம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.
இதில் மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில், விவசாயம் அதிகமாக நடைபெற்று வருகிறது.
விவசாய நிலங்களில் வண்டல் மண் பயன்படுத்தினால், ரசாயன உரங்கள் பயன்பாடு குறையும்.
உலர் நிலங்களில் வண்டல் மண் பயன்படுத்தினால், மண் மாற்றம் ஏற்படும். ஆனால், ஏரியில் வண்டல் மண் எடுக்கவும், மண்பண்ட தொழில் செய்ய மண் எடுக்கவும், அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை, கடந்த ஆண்டு அரசு நீக்கியது.
இதையடுத்து மாவட்டத்தில் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள், வண்டல் மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்துச் செல்ல, கடந்தாண்டு நவம்பர் மாதம் வரை, நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 336 ஏரிகளும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 305 ஏரிகளும் என, மொத்தம் 641 ஏரிகளில் வண்டல் மண், களிமண் எடுக்க, மாவட்ட அரசிதழில் பிரசுரம் செய்து, அனுமதி வழங்கப்பட்டது.
தற்போது கூடுதலாக, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 209 ஏரிகளும், ஊரக வளர்ச்சித் துறையில் உள்ள 276 ஏரிகளும் என, மொத்தம் 485 ஏரிகளில் வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க, கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி, மாவட்ட அரசிதழில், கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டு, அனுமதி வழங்கப்பட்டது.
அதன் பின், தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின் கீழ், கட்டணமில்லாமல் விவசாய மேம்பாட்டிற்காக மண் எடுக்க மனு செய்வதற்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இதன்படி, மனுதாரரின் வசிப்பிடம் அல்லது விவசாய நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண், களிமண் துார் வாரி எடுத்துச்செல்லப்பட வேண்டிய ஏரிகள் அமைந்துள்ள கிராமம் அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.
விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண்ணை பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பவர்கள், விவசாய நிலம் வைத்திருக்க வேண்டும். அல்லது குத்தகை பதிவேட்டின் பதிவு செய்யப்பட்ட குத்தகைதாரராக இருக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களை, கிராம நிர்வாக அலுவலர் உறுதி செய்ய வேண்டும். மேற்குறிப்பிட்ட தகவல்களுடன் தங்களது விண்ணப்பத்தை tnesevai.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார்கள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மற்றும் உதவி இயக்குனர், புவியியல் மற்றும் சுங்கத்துறை அலுவலர் ஆகியோரை அணுகலாம் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
இதையடுத்து மாவட்டத்தில் கடந்தாண்டு, 447 பேர் மண் எடுக்க அனுமதி கோரி மனு அளித்தனர். இதில், 400 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டு, ஏரிகளில் மண் எடுத்தனர்.
இந்தாண்டு, 485 ஏரிகளில் வண்டல் மண், களிமண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், வண்டல் மண் மற்றும் களிமண் தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அனுமதி வழங்கப்பட்ட ஏரிகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கும், களிமண் எடுக்க மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மண் தேவைப்படுவோர், தாசில்தார்களிடம் இதற்காக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
-- அருண்ராஜ்,
செங்கல்பட்டு கலெக்டர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏரி வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் கொட்டி பயன்படுத்தியதால், நெல் விளைச்சல் அதிகமாக மகசூல் கிடைத்தது. வண்டல் மண் கோரி மனு அளிப்பவர்களுக்கு, உடனுக்குடன் தாசில்தார்கள் அனுமதி வழங்க வேண்டும்.
-வெங்கடேசன்,
மாவட்ட விவசாய நலச்சங்க தலைவர்,
செங்கல்பட்டு.