/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிரஷருக்கு எதிர்ப்பு விவசாயிகள் முற்றுகை
/
கிரஷருக்கு எதிர்ப்பு விவசாயிகள் முற்றுகை
ADDED : பிப் 04, 2024 02:33 AM

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த பூதுார், ஈசூர், சகாய நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதிகளில் பாலாறு தடுப்பணை மற்றும் கிளியாறு தடுப்பணை உள்ளதால், 800 ஏக்கருக்கும் மேல் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், ஈசூர்- - தச்சூர் சாலையில், நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடையே, 1.50 ஏக்கர் நில பரப்பில், விஜயராஜா மைண்ஸ் அண்ட் மினரல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினர், கல்குவாரியில் இருந்து கருங்கற்கள் கொண்டு வந்து, அரவை செய்யும் கிரஷர் அமைப்பதற்காக இடம் வாங்கி உள்ளனர்.
இதனால், நெல் மற்றும் கரும்பு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மதுராந்தகம் வட்டாட்சியர், கலெக்டர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரஷர் அமைந்தால், நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றனர். இதை தொடர்ந்து, நேற்று ஜல்லிக்கற்கள் அரவை செய்யும் கிரஷர் அமைய உள்ள பகுதியை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர்.